மோசமான நோய்ப்பரவல்களால் குழந்தைகள் உயிரிழப்பு

1 mins read
ea5d0202-02be-46b6-9eed-7844bd0fffac
ஆக்ரா, கானாவில் தாய்மாரும் குழந்தைகளும் தடுப்பூசி போடுவதற்காகக் காத்திருக்கின்றனர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

ஆக்ரா, கானா: பெரிய அளவில் ஏற்படும் மோசமான நோய்ப்பரவல்கள் உலகம் முழுவதும் பரவிவருகின்றன. அவற்றால் பெரும்பாலும் குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கிருமிப்பரவலின்போது சுகாதாரக் கட்டமைப்புகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கின. அதன் காரணமாகவே வழக்கமான குழந்தைப்பருவத் தடுப்பூசியின்றி 60 மில்லியன் குழந்தைகள் உள்ளனர்.

இவ்வாண்டின் நடுப்பகுதிக்குள் 47 நாடுகள் மோசமான தட்டம்மை நோய்ப்பரவல் ஏற்பட்டிருந்ததாகக் கூறின. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த எண்ணிக்கை 16ஆக இருந்தது.

நைஜீரியா அதன் வரலாற்றிலேயே ஆகப் பெரிய அளவிலான ‘டிப்தீரியா’ எனும் தொண்டை அழற்சி நோய்ப்பரவலை எதிர்நோக்கி வருகிறது. 17,000க்கும் அதிகமானோர் அந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அதனால் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஸிம்பாப்வே வரை 12 நாடுகள் ‘போலியோ’ கிருமி பரவிவருவதாகக் கூறியுள்ளன.

தடுப்பூசிகளைப் பெறாத பல குழந்தைகள் வழக்கமான தடுப்பூசித் திட்டங்களுக்கான வயது வரம்பைத் தாண்டிவிட்டனர்.

மாண்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேரில், ஒரு தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளாதவர்கள் என்றும் அவர்கள் தடுப்பூசிகளால் தவிர்க்கக்கூடிய நோய்களால் உயிரிழந்தனர் என்றும் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் அமைப்பான ‘காவி’ கூறியது.

கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக கூடுதலாக 85 மில்லியன் குழந்தைகள் போதிய அளவு தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெறுவதற்குத் தேவையான தடுப்பூசிகளில் சிலவற்றை மட்டுமே அவர்கள் போட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்