கூலாய்: கோலாலம்பூரிலும் சிங்கப்பூரிலும் பணிபுரியும் ஜோகூர் மக்கள், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் வாக்களிக்க ஜோகூர் திரும்புவதற்குத் தயங்கக் கூடாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியூர்களில் வசிக்கும் மக்கள், குறிப்பாக இளையர்கள், தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தங்களது வாக்கு மிக முக்கியமானது என்பதை உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“நீங்கள் உங்களது எதிர்காலத்தையும் ஜோகூரின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும்,” என்று சனிக்கிழமை (ஜூலை 4) ஜோகூர் மாநிலம், கூலாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலின் முடிவு எப்படி அமைந்தாலும், தாம் தொடர்ந்து பிரதமராக நீடிக்கப்போவதாக திரு அன்வார் நினைவூட்டினார்.
இதற்கிடையே, புத்ராஜெயாவின் கூட்டரசுப் பொறுப்புகளையும் ஜோகூர் மாநில நிர்வாகத்தின் உள்ளூர் கடமைகளையும் அவர் பிரித்துக் காட்டினார்.
உள்ளூர் தலைமைத்துவமும் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க அமைச்சும் காட்டிய தீவிர அர்ப்பணிப்பு காரணமாகவே கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக்கில் வசிக்கும் மக்களின் வீடுகள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

