புளோரிடா: வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
நைஜீரிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அமெரிக்க ராணுவத்தினரும் வியாழக்கிழமை (டிசம்பர் 25) தெரிவித்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், அவ்வட்டாரத்தில் இருந்த கிறிஸ்துவர்களைக் குறிவைத்ததாக நம்பப்படுகிறது.
“இன்று இரவு, என்னுடைய உத்தரவின்படி வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. பல ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக அப்பாவி கிறிஸ்துவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்று வருகின்றனர்,” என்று திரு. டிரம்ப் தமது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நைஜீரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சோகோடோ மாநிலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்கத் தளபத்தியம் கூறியது.
முன்னதாக தளபத்தியம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நைஜீரிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பதிவு அகற்றப்பட்டது.
அக்டோபர் மாத இறுதியில் திரு. டிரம்ப், நைஜீரியாவில் உள்ள கிறிஸ்துவர்கள் அச்சுறுத்தலில் இருப்பதாக எச்சரித்திருந்தார். கிறிஸ்துவச் சமூகங்களைக் குறிவைக்கும் வன்முறையை நிறுத்தத் தவறியதற்காக மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் தலையீடு இருக்கும் என்று அவர் மிரட்டியிருந்தார்.
இதற்கிடையே நைஜீரிய வெளியுறவு அமைச்சு, அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியது.

