வாஷிங்டன்: ஈரான் போருக்கென $122 பில்லியன் (US$95 பில்லியன்) நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை அமெரிக்கப் பிரதிநிதிகளின் சபை புதன்கிழமை (ஜூலை 22) வழங்கியுள்ளது.
அதற்கான வரவு செலவுத் திட்ட வரைவு 216க்கு 214 என்ற மிகக் குறைந்த வாக்கெடுப்பு எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.
அத்திட்டத்தின் பெரும்பகுதியான $122.48 பில்லியன் தொகை அமெரிக்காவின் ஆயுதப் படைகளுக்கும் உளவுத்துறைக்கும் வழங்கப்படவுள்ளது. எனவே அத்தொகை ஈரானுக்கு எதிரான போருக்கு முக்கியமாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னெடுத்த வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்க விவசாயிகளுக்கு உதவ $15.47 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதோடு அதிபர் அறிமுகப்படுத்த விரும்பும் புதிய தேர்தல் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு $12.90 பில்லியனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவுகள் செனட் சபையில் ஒப்புதல் பெற்ற பிறகு குடியரசுக் கட்சியினர் அதன் முழு சட்ட வடிவை அமைக்க முடியும்.
சபாநாயகர் ஆதரவு
இந்தச் செயல்பாட்டின் இரு அடிப்படை இலக்குகளை அடைய குடியரசுக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு என சபாநாயகர் மைக் ஜான்சன் நிதி ஒதுக்கீட்டைக் குறிப்பிட்டார். தேர்தலை முறைப்படுத்துவதும் நாட்டை வலுப்படுத்துவதும் அந்த இரண்டு இலக்குகளாக அவர் அடையாளப்படுத்தினார்.
ஈரானுக்கு எதிராக அதிபர் டிரம்ப் நடத்திவரும் போரைத் தொடர்வதற்கு நிதி வழங்கும் முடிவுகளை நிராகரித்தார் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான ரோசா டிலாவ்ரோ.

