தாக்குதலை நிறுத்தி, பேச்சைத் தொடங்க அமெரிக்காவும் ஈரானும் இணக்கம்

தாக்குதலை நிறுத்தி, பேச்சைத் தொடங்க அமெரிக்காவும் ஈரானும் இணக்கம்

2 mins read
35ef6cca-8120-4c55-a28d-c6c53aca30a8
(இடமிருந்து) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, குவைத்தின் வெளியுறவு அமைச்சர் ‌ஷேக் ஜார்ரா ஜாபர் அல்-அஹ்மது அல்-சபா, கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு ‌ஷேக் முகம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: வளைகுடா வட்டாரத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களை நிறுத்த ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்க அதிகாரி ஒருவர் அதனை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணை குறித்த பேச்சுகளை மீண்டும் தொடங்க இருதரப்பும் இணங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்ட இடைக்காலச் சண்டை நிறுத்தம், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டதால் நெருக்குதலுக்கு உள்ளானது.

“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச்சுகளைத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது. இருதரப்பும் இப்போது அமைதி காக்கும், கப்பல்கள் தடையின்றி சென்றுவரலாம்,” என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

இம்மாதம் 17ஆம் தேதி, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் இணங்கின. அதன்படி போக்குவரத்துக்கு நீரிணை மீண்டும் திறந்துவிடப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

சண்டை நிறுத்தம் பற்றி முதலில் தகவல் வெளியிட்ட ஆக்சியோஸ் ஊடகம், சமரசப் பேச்சு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கத்தாரில் தொடங்கும் என்று குறிப்பிட்டது.

ஜூன் 25ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஏவுகணை ஒன்று சரக்குக் கப்பல்மீது தாக்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக இரு நாடுகளும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக ஈரானும் அமெரிக்காவும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறின.

ஈரான்-ஓமான் பேச்சு

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்து ஓமானுடன் பேச்சு நடத்தியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

நீரிணையின் எல்லைப் பகுதியில் ஈரானும் ஓமானும் அமைந்துள்ளன. ஈரானியப் போருக்கு முன்பு, உலகின் மொத்த எண்ணெய், திரவ இயற்கை எரிவாயுவில் ஏறக்குறைய 20 விழுக்காடு அதன் வழியாகத்தான் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

எதிரிகளிடம் தனது ஆதிக்கத்தைக் காட்டுவதற்காக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டது. அமெரிக்காவுடன் நடத்தப்படும் சமரசப் பேச்சுகளில் அதுவே முட்டுக்கட்டையாக உள்ளது.

“மஸ்கட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது கூட்டு ஹோர்முஸ் குழுவின் முதல் கூட்டம் நடந்தது,” என்று ஈரானிய வெளியுறவுத் துணை அமைச்சர் காஸிம் கரிபாபாடி தெரிவித்தார். நீரிணையின் தொடர்பில் தற்போதைய விவகாரங்களை விவாதித்த அதே வேளையில் எதிர்கால நிர்வாகம் குறித்தும் ஓமானியத் தரப்புடன் பேசியதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்