துபாய்: மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர இணங்கியிருப்பதாக அமெரிக்க, ஈரானிய அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நிறுத்தவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
“ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவுக்கு வந்துவிட்டது,” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவரின் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 5.30 மணி) பதிவிட்டார்.
உடன்பாடு எட்டப்படுவதற்கான சமரசப் பேச்சைப் பாகிஸ்தான் முன்னெடுத்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதாகப் பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அறிவித்த சிறிது நேரத்தில், திரு டிரம்ப்பின் கருத்து வெளியானது.
புரிந்துணர்வுக் குறிப்பு, வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டுள்ளது. உடன்பாட்டின் முழு விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் உடனடியாக அதேநேரம் நிரந்தரமாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் அழைப்பு விடுப்பதாகத் திரு ஷரீஃப், ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமரசப் பேச்சில் லெபனான் விவகாரம் முட்டுக்கட்டையாக இருந்துவந்தது. அண்மை வாரங்களில் லெபனானும் இஸ்ரேலும் ஒன்று மற்றொன்றின்மீது தாக்குதல்களைத் தொடுத்தன. திரு டிரம்ப்பும் மற்றவர்களும் தாக்குதல்களை நிறுத்துமாறு கோரியும் அவை செவிமடுக்க மறுத்தன.
லெபனான் உட்பட எல்லா முனைகளிலும் போரும் ராணுவ நடவடிக்கைகளும் திங்கட்கிழமை இரவிலிருந்து நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அறிக்கையொன்றில் ஈரானின் உச்சநிலை தேசியப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
சண்டை நிறுத்த உடன்பாடு பற்றிய அண்மை அறிவிப்புக் குறித்து இஸ்ரேல் உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க-ஈரான் பேச்சில் அங்கம் வகிக்கவில்லை என்று அது ஏற்கெனவே கூறியிருந்தது.
இந்நிலையில், ஈரானியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில், அந்நாட்டுடன் உடன்பாடு எட்டப்பட்டதாகத் திரு டிரம்ப் அறிவித்திருப்பதை உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மத்திய கிழக்குப் போருக்குத் தீர்வுகாண அது முக்கியப் படிக்கல் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறினார்.
ஈரான்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றத் தயாராய் இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகியவை தெரிவித்தன.
“நிலைமையைச் சீர்செய்ய அமெரிக்கா, ஈரான், வட்டார நாடுகள் ஆகியவற்றுடன் பணியாற்றவும் நீண்டகாலத் தீர்வை எட்டவும் ஆயத்தமாக உள்ளோம்,” என்று அவை குறிப்பிட்டன.

