வாஷிங்டன்: ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியைத் தயாரிக்க மொடர்னா நிறுவனத்திற்கு அமெரிக்க மருந்து, உணவு நிர்வாகத் துறை அனுமதி அளித்துள்ளது.
பருவகாலக் காய்ச்சலுக்கு ‘மெசஞ்சர் ஆர்என்ஏ’ (mRNA) அடிப்படையிலான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுவது இதுவே முதல்முறை என மொடர்னா நிறுவனம் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.
‘எம்ப்ளூசிவா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் தடுப்பூசி, 50 முதல் 64 வயதுடையவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான முழுமையான முறையான ஒப்புதலை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட மூத்தோரிடம் ‘எம்ப்ளூசிவா’ தடுப்பூசியின் செயல்திறனை மேலும் உறுதிப்படுத்த, கூடுதல் ஆய்வு நடத்தி கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க மொடர்னா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
“காய்ச்சல் என்பது இன்னமும் ஒரு பெரிய பொது சுகாதார சவாலாகவே உள்ள நிலையில் ‘எம்ப்ளூசிவா’ தடுப்பூசி மூத்த அமெரிக்கக் குடிமக்களுக்கான புதிய தெரிவாக அமையும்,” என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட பரிசோதனைகள் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தடுப்பூசித் தயாரிப்புக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தப் பரிசோதனையில், தற்போது புழக்கத்தில் உள்ள வழக்கமான காய்ச்சல் தடுப்பூசியைவிட ‘எம்ப்ளூசிவா’ 26.6 விழுக்காடு அதிக செயல்திறன் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.


