பெய்ரூட்: அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததை அடுத்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிக்கான வாய்ப்புகள் மேலும் கேள்விக்குறியாகியுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார்.
“அமெரிக்காவின் பதில் தாக்குதல் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று கருதினேன். இந்தத் தாக்குதலும் அவ்வாறே அமைந்துள்ளது,” என்று ஏபிசி செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டரின் இரு அமெரிக்க விமானிகளும் காயமின்றி தப்பியதாக அதிபர் டிரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். ஈரானின் ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி அந்த ஹெலிகாப்டரை ஈரான் தகர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல், ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடி என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள ஈரானின் பல வான்வெளிப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானுக்குச் சொந்தமான தீவு, ஈரானின் துறைமுக நகரமான சிரிக் ஆகியவை தாக்கப்பட்டதாக ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் உறுதிபடுத்தியது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். மேலும், மத்திய கிழக்கில் இருக்கும் வெளிநாட்டுப் படைகள் ஆபத்தில் சிக்காமல் இருக்க, அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதே சிறந்த தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் எந்தவொரு வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஈரானிய ராணுவத் தரப்பு கூறியுள்ளது. இருப்பினும், பகைவர்கள் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியிருப்பதால் அவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் போர்ச் சூழலும் பதற்றமும் தொடர்கின்றன. செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9) லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் குறைந்தது எட்டு பேர் மாண்டனர்.

