ஈரான்மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்

ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி

ஈரான்மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்

2 mins read
7430666c-78bd-4d9f-a990-8438ef1b21e1
ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலால் உயிரிழப்புகளோ உள்கட்டமைப்புக்குச் சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை எனக் கூறப்படுகிறது - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஈரான்மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஜோர்தானில் நடந்த ஈரானியத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காணாமல் போனதாகவும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது

சனிக்கிழமை அமெரிக்கா இத்தாக்குதல்களை நடத்துவதற்கு முன்னதாக, அந்நாடு மோதலைத் தீவிரப்படுத்த முயல்வதாகவும் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோல்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், கிழக்கு நேரப்படி மாலை 6 மணிக்கு வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியதாக மத்தியப் படைப்பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

“ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு ஈரான் விடுத்துவரும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கும், நேற்றிரவு ஜோர்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படைக்கு விரைந்து தண்டனை விதிப்பதற்கும் இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ள மத்தியப் படைப்பிரிவு, இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

தெற்கு ஈரானில் உள்ள சிரிக் பகுதிக்கு அருகே அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியதாக ஈரானின் ‘மெஹ்ர்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எனினும், இந்தத் தாக்குதலால் உயிரிழப்புகளோ உள்கட்டமைப்புக்குச் சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முழுமையான போர் வெடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

 அண்மையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும் 420க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ‘எக்ஸ்’ தளத்தில், “மாவீரர்களுக்கு நல்வாழ்த்துகள். அவர்களின் தியாகம் எங்களின் உறுதியை மேலும் பலப்படுத்துகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காபோர்தாக்குதல்