ஈரானிய ராணுவத் தளங்களைத் தாக்கிய அமெரிக்கா; ஈரான் பதிலடி

ஈரானிய ராணுவத் தளங்களைத் தாக்கிய அமெரிக்கா; ஈரான் பதிலடி

2 mins read
ee3b2fed-1d3c-4660-9c8a-346b05c38d9c
தற்காலிகச் சண்டை நிறுத்தம் அமலில் இருந்தாலும் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: ஈரானிய ராணுவத் தளங்களை இவ்வார இறுதியில் தாக்கியதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இதற்குப் பதிலடியாக ஜூன் 1ஆம் தேதி ஒரு அமெரிக்கா ராணுவத் தளத்தைத் தாக்கியதாக ஈரானிய புரட்சிப் படை கூறியது.

அமெரிக்கா-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஏப்ரலில் தற்காலிகச் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது ஒன்றையொன்று தாக்கி வருகின்றன.

மே 28ஆம் தேதியும் இதே போன்ற மோதல் ஏற்பட்டது.

"அனைத்துலகக் கடல் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த அமெரிக்காவின் எம்கியூ-1 ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது உட்பட ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வார இறுதியில் ஈரானின் வளைகுடா கடற்கரைமீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது," என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் (சென்ட்காம்) எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் கூறியது.

“வட்டார கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் இரண்டு வானூர்திகளை அமெரிக்கப் போர் விமானங்கள் உடனடியாகத் தாக்கி அழித்தன,” என்று சென்ட்காம் விளக்கியது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் ஒரு விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிக் காவலர் படை, ஜூன் 1ஆம் தேதி கூறியது.

அது எந்த ராணுவத் தளம் என்பதை அது தெரிவிக்கவில்லை.

ஆனால், குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியது.

இந்நிலையில் இவ்வட்டாரப் பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளை ஈரான் சீர்குலைப்பதாகக் கூறிய குவைத், ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதல்களை கண்டித்தது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஈரான்போர்ஈரான் போர்