வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்கள் நம்பமுடியாத, மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகவும் அவை ஈரானின் அணுசக்தி இலக்குகலை முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
நிலத்தடி கட்டமைப்புகளை தகர்க்கும் திறன் கொண்ட 14 ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகள், நீண்டதூரம் சென்று தாக்கும் 24க்கும் அதிகமான ‘டோமஹாக்’ ஏவுகணைகள், 125க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் உள்ளிட்டவை அமெரிக்கத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன.
தற்காப்பு அமைச்சு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு ஹெக்செத், இந்தத் தாக்குதல்கள் ஈரானியப் படைகளையோ மக்களையோ குறிவைக்கவில்லை என்றார். அமெரிக்க ராணுவ நடவடிக்கை ‘ஒருமுகப்படுத்தப்பட்டது, சக்திவாய்ந்தது, தெளிவானது’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“அதிபர் டிரம்ப் திட்டமிட்ட இந்த ராணுவ நடவடிக்கை துணிச்சலானது, புத்திசாலித்தனமானது. அமெரிக்க அச்சுறுத்தல் திரும்ப வந்துவிட்டதை உலகிற்கு இது காட்டியது. இந்த அதிபர் பேசும்போது உலகம் அதைக் கேட்க வேண்டும்,” என்றார் திரு ஹெக்செத்.