கெய்ரோ/துபாய்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை (ஜூலை 15) ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதையடுத்து, வட்டாரத்தில் கூடுதலான எரிசக்தி ஏற்றுமதி இடங்களை மூடப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடன் தங்களுக்கு ‘வாழ்வா சாவா’ (Existential War) போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
ஈரானின் கடலோரத் தற்காப்புக் கட்டமைப்பு உள்ளிட்ட ராணுவ இலக்குகளை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்குத் (சிங்கப்பூரில் மாலை 6 மணி) தாக்கத் தொடங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு அந்தத் தாக்குதல் நீடித்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், 9 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் கூறியது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தடையின்றிச் செல்வதற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வலியுறுத்தும் நோக்கில் அமெரிக்கா நடத்தும் இந்தத் தாக்குதல்கள், மேலும் சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பாக அமெரிக்கா அழிக்க நினைக்கும் ஈரானின் ராணுவத் திறன்களையும் குறிவைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மூவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலமுறை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் ஈரானின் கார்க் தீவை நோக்கிச் செல்ல முயன்ற, காலியான எண்ணெய் விநியோகக் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அஹ்வாஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையும் அடங்கும் என்று ஈரானிய அரசாங்க ஒலிபரப்புக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையம் அந்த மருத்துவமனையில் இயங்குகிறது. தாக்குதலை அடுத்து, அங்குள்ளோர் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டதாகவும் குடும்பத்தினர் வீதிகளில் நின்றிருக்க நேரிட்டதாகவும் கூறப்பட்டது.

