தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்களின் கடப்பிதழ் ரத்து: அமெரிக்கா, ஆஸ்திரேலியா கவலை

1 mins read
2c70798f-6c98-4849-9878-30e684adf175
ஹாங்காங் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் காணப்படும் தப்பியோடிய ஜனநாயக ஆர்வலர் நாதன் லா பற்றிய குறிப்புகள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் ஆறு பேரின் கடப்பிதழ்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஜூன் 14ஆம் தேதி கவலை தெரிவித்துள்ளன.

‘ஆர்ட்டிகிள் 23’ என்றழைக்கப்படும் அந்தப் பாதுகாப்புச் சட்டம் மார்ச் மாதம் நடப்புக்கு வந்தது. முன்னதாக, எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்காக, 2020ல் பெய்ஜிங் அச்சட்டத்தை அறிவித்தது.

ஜூன் 12ஆம் தேதி, அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக ஆர்வலர்கள் ஆறு பேரின் கடப்பிதழ்களை ஹாங்காங் ரத்து செய்தது.

ஹாங்காங்கின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேதன் லா, மூத்த தொழிற்சங்கவாதி கிறிஸ்டஃபர் முங் சியு டாட், ஆர்வலர்கள் ஃபின் லாவ், ஃபொக் கா சி, சோய் மிங் டா, சைமன் செங் ஆகியோர் அவர்கள்.

அந்த ஆறு பேரும் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் தொடர்ந்து தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தாக விளங்குகின்றனர் என்றும் கூறப்பட்டது.

எதிர்ப்பு தெரிவிப்போரை ஒடுக்கும் இத்தகைய முயற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி ஹாங்காங் அதிகாரிகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்படுவதாக ஆஸ்திரேலியாவும் கவலை தெரிவித்தது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் வெகுதொலைவிலும் எதிரொலிப்பதாகவும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனிநபர்களையும் அது பாதிப்பதாகவும் கேன்பரா கூறியது.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவை ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்