கரகாஸ்: வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ், முடக்கப்பட்ட நிதியை அணுகுவதற்கு அமெரிக்கா அனுமதியளிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
“வெனிசுவேலாவின் மக்களுக்குச் சொந்தமான வளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்,” என்றார் அவர். அரசாங்கத் தொலைக்காட்சியில் திருவாட்டி ரோட்ரிகஸ் அதனைத் தெரிவித்தார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிக்கலஸ் மடுரோவிற்குப் பதிலாக இடைக்கால அதிபராக அவர் செயல்படுகிறார்.
“மருத்துவமனைகளுக்கான சாதனங்களை வாங்குவதற்கு நிதியில் கணிசமான பங்கை முதலீடு செய்ய அது வழிவிடும். அத்தகைய சாதனங்களை அமெரிக்காவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வாங்குகிறோம்,” என்று திருவாட்டி ரோட்ரிகஸ் கூறினார்.
இருப்பினும் எவ்வளவு தொகை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெனிசுவேலாவுக்கு எதிராகத் தடைகளை விதித்தது அமெரிக்கா. 2018ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய முறையில் மடுரோ மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா தடைகளை அறிவித்தது.
அமெரிக்க ராணுவம், இம்மாதம் மூன்றாம் தேதி வெனிசுவேலாவுக்குள் அதிரடியாக நுழைந்து மடுரோவையும் அவரின் மனைவியையும் கைதுசெய்தது. அதன் பின்னர் வாஷிங்டனுக்கும் வெனிசுவேலாவின் இடைக்கால அரசாங்கத்திற்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
வாஷிங்டனின் நிலையை இடைக்கால அரசாங்கம் பின்பற்றவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிப்பதும் வாஷிங்டன் முன்வைத்த நிபந்தனைகளில் அடங்கும்.
திருவாட்டி ரோட்ரிகசின் தலைமைத்துவத்தை மிகவும் வலிமையானது என்று பாராட்டிய திரு டிரம்ப், வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா ஏற்கெனவே பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாகக் கூறினார். இருப்பினும் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர், தமது நாடு அமெரிக்க மேற்பார்வையின்கீழ் செயல்படவில்லை என்று வலியுறுத்துகிறார்.
தொடர்புடைய செய்திகள்
உலகின் எண்ணெய் வளத்தில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு வெனிசுவேலாவில் உள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை விநியோகித்தது அது. 2007ஆம் ஆண்டுவரை அங்கு அமெரிக்காவின் பல நிறுவனங்கள் செயல்பட்டுவந்தன.

