வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய அரசாங்கத்துக்குக்கீழ் வரும் அமைப்புகளுக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நிதி வழங்க வகை செய்யும் திட்டம் ஒன்றுக்கு சனிக்கிழமையன்று (டிசம்பர் 21) அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதனால் அமெரிக்க அரசாங்கத் துறை முடங்கிப்போவது தவிர்க்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் துறை முடங்கிப்போவதைத் தவிர்ப்பதற்கான செலவினத் திட்டத்தை வரைய அமெரிக்க அரசியல் தலைவர்கள் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். திட்டத்தை வரைவதற்கான கெடு நிறைவடைந்த சில நிமிடங்களுக்குப் பிறகும் அவர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். நடப்பில் இருக்கும் வழிமுறைகளுக்குப் பதிலாக செலவினத் திட்டத்துக்கு வெகு விரைவில் ஒப்புதல் பெறுவதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பை நடத்த அவர்கள் பாடுபட்டனர்.
அரசாங்கத் துறை முடங்கிப் போயிருந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் 800,000க்கும் அதிகமான ஊழியர்கள் சம்பளமின்றி வீடு திரும்பும் நிலை ஏற்பட்டிருக்கும்.
இறுதியில் இரு கட்சிகள் இணைந்து செயல்படும் முறைக்கு வெற்றி கிடைத்தது ஒரு நற்செய்தி என்று செனட் சபைக்கான ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் கருத்துரைத்தார். செனட் சபையில் பெரும்பான்மை இடங்களை வகிக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு செனட் சபைக்கான கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட செலவினத் திட்டம் வரும் மார்ச் மாதம் 14ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். விவசாயிகளுக்கான 110 பில்லியன் டாலர் (149 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான பேரிடர் உதவி, நிதி நிவாரண ஆதரவு இத்திட்டத்தில் இடம்பெறும் அம்சங்களில் ஒன்று.
கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 19) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத செலவினத் திட்டத்துக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் கிடையாது.
அடுத்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டோனல்ட் டிரம்ப், அமெரிக்கா பெறும் கடன் தொகைக்கான உச்சவரம்பை ஈராண்டுகளுக்கு விலக்கக் கோரியிருந்தார்; அந்த அம்சம் மட்டும்தான் புதிய செலவினத் திட்டத்தில் அகற்றப்பட்டது.