ஈரானிய விமான நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தடை: அமெரிக்கா

ஈரானிய விமான நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தடை: அமெரிக்கா

படம்: ஏஎஃப்பி

28 Apr 2026 - 1:23 pm

2 mins read

வாஷிங்டன்: ஈரானிய விமான நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள்மீது பொருளியல் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) எச்சரித்துள்ளார்.

ஈரானுக்குப் பொருளியல் நெருக்கடி தர மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக டெஹ்ரான் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வர்த்தக ரீதியான விமானச் சேவை மீண்டும் தொடங்கியிருப்பதாகக் கடந்த வார இறுதியில் ஈரானிய அரசாங்க ஊடகம் தெரிவித்திருந்தது.

இஸ்தான்புல், ஓமானியத் தலைநகர் மஸ்கட், சவூதி அரேபிய நகரமான மதினா, ஈராக், கத்தார் ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

முக்கிய எச்சரிக்கைகள்

இவ்வேளையில், ஈரானிய அரசாங்கத்தின்மீது அமெரிக்கா நிதிக் கட்டுப்பாட்டை விதிப்பதாக அமைச்சர் பெசென்ட் கூறியுள்ளார்.

தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானிய விமான நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தால் அமெரிக்காவின் பொருளியல் தடைகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்படும் என்று திரு பெசென்ட் தமது ‘எக்ஸ்’ தளப் பதிவில் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட ஈரானிய விமானங்களுக்குத் தேவையான எரிபொருள், உணவு விநியோகம், தரையிறக்கக் கட்டணம் அல்லது பராமரிப்புப் பணிகளை அந்தந்த நாட்டின் நிறுவனங்கள் வழங்காமலிருப்பதை உறுதிசெய்ய, வெளிநாட்டு அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரானிய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் அல்லது அதற்குத் துணைபுரியும் மூன்றாம் தரப்பினர்மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க நிதியமைச்சு தயங்காது என்று திரு பெசென்ட் எச்சரித்தார்.

மேலும், ஈரானின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உதவும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள்மீது இரண்டாம் கட்டப் பொருளியல் தடைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காதடைவிமான நிறுவனம்நிறுவனம்வர்த்தகம்நிதியமைச்சர்