வாஷிங்டன்: நீண்டகால நட்பு நாடுகளான அமெரிக்காவுக்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டதை அடுத்து, கனடியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்துள்ளது. பல நாள்கள் நீடித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளன.
கிட்டத்தட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனடாவின் இறக்குமதிப் பொருள்கள் மீது இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. தற்போது அரிதாக மட்டுமே பயன்படுத்தப்படும் மரத்தாலான ஐஸ் ஹாக்கி மட்டைகள் போன்ற பொருள்கள் இதில் அடங்கும்.
மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்கும் கனடாவுக்கு இந்த வரி விதிப்பு உடனடியாகப் பெரிய பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இது அமெரிக்காவுக்கான கனடாவின் மொத்த ஏற்றுமதியில் 5 விழுக்காட்டுக்கும் சற்று கூடுதலான அளவே ஆகும்.
இருப்பினும், இந்த நடவடிக்கை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டைப் புதுப்பிப்பதற்கான விரிவான பேச்சுவார்த்தையை இது மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தாம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும் அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகளுக்கு ஈடான பதிலடி வரிகளை கனடா விதிக்கும் என்றும் திரு கார்னி அறிவித்துள்ளார்.
“அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன். கனடாவின் பேச்சுவார்த்தைக் குழுவினரை மீண்டும் ஒட்டாவாவுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளேன். கடைசி நிமிடம் வரை கனடா மக்களின் நலன்களைப் பாதுகாக்க எங்கள் குழுவினர் நேர்மையாகவும் தீவிரமாகவும் உழைத்தனர். ஆனால், அமெரிக்கா கடைசி நேரத்தில் பரிந்துரைத்த மாற்றங்கள் நியாயமற்றதாகவும் பொருளியல் ரீதியாகப் பொருந்தாததாகவும் இருந்ததுடன், எந்தவொரு உடன்பாட்டின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது,” என்று திரு கார்னி தெரிவித்தார்.


