தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெனிசுவேலா தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகள் மக்கள் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை: பிளிங்கன்

2 mins read
4d7597fa-4dec-4192-b689-e89329190405
வெனிசுவேலா அதிபரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான நிக்கலஸ் மதுரோ (இடது) ஜூலை 29ஆம் தேதியன்று கராகசில் அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். - படம்: ஏஏஃப் பி

தோக்கியோ: வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோ மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவித்து, வெனிசுவேலா தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகள் மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதில் அமெரிக்கா தீவிர அக்கறை கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் திங்கட்கிழமை தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த சில நிமிடங்களில், இந்தோ-பசிபிக் நாடுகளின் வளர்ச்சி குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தின் இடையே பிளிங்கன் இவ்வாறு கருத்துரைத்தார்.

“சற்று முன்பு வெனிசுவேலா தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளைப் பார்த்தோம். அது வெனிசுவேலா மக்களின் விருப்பத்தையோ அவர்களின் வாக்குகளோயோ பிரதிபலிக்கவில்லை என்பதில் நாங்கள் தீவிர அக்கறை கொண்டுள்ளோம்,” என்று திரு பிளிங்கன் கூறினார்.

வெனிசுவேலா அதிபர் தேர்தலை அனைத்துலக சமூகம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்றும் அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு வாக்கும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் எண்ணப்படுவது மிகவும் முக்கியம். தேர்தல் அதிகாரிகள் உடனடியாக எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் தாமதமின்றி தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும், தேர்தல் அதிகாரிகள் வாக்குகளின் விரிவான அட்டவணையை வெளியிடுவதும் முக்கியம்,” என்று திரு பிளிங்கன் விவரித்தார்.

வெனிசுவேலாவின் தேசிய தேர்தல் ஆணையம் திரு மதுரோ 51% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகக் கூறியது. ஆனால் தேர்தலுக்கு முன் வெளியான பல கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சி வெற்றி பெறும் என்று முன்னுரைத்திருந்தது.

வெனிசுவேலாவின் தேசிய தேர்தல் ஆணையம் தன்னிச்சையான ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அது அரசாங்கத்தின் ஓர் இணை அமைப்பாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

அமெரிக்கத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற எடிசன் ரிசர்ச் அமைப்பு, எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கொன்சாலஸ் 65% வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்றும் மதுரோவுக்கு 31% வாக்குகள் கிடைக்கும் என்று முன்னுரைத்திருந்தது.

சோஷலிஸ்ட் தலைவர் மதுரோவின் 2018 மறுதேர்தலை நிராகரித்த வாஷிங்டன், கடந்த அக்டோபரில் வெனிசுவேலாவின் எண்ணெய்த் தொழில் மீதான தடைகளை, மதுரோ மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்குப் பிறகு தளர்த்தியது.

வாஷிங்டன் பின்னர், ஜனநாயக முறையில் வாக்கெடுப்புக்கு எதிராக ஆளும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளது என்று கூறி, வர்த்தகத் தடைகளை மீண்டும் அமல்படுத்தியது. மேலும், வெனிசுவேலா தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பொருத்து தங்கள் பொருளியல் தடைக் கொள்கையை பரிசீலிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி விளக்கியது.

இதற்கிடையே, வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோவும் எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கொன்சாலசும் தங்களுக்குத்தான் வெற்றி என்று திங்கட்கிழமை கூறிக்கொண்டனர்.

எதிர்க்கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று உடனடியாகத் தெரியாதவில்லை. இந்நிலையில், தமது ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள் என்றும் எவ்வித வன்முறை செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றும் திரு கொன்சாலஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்