வாஷிங்டன்: அந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மனிதக் கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்புகள் உள்ளதென அண்மையில் வெளிப்படையாக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன் விளைவாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான புதிய சட்டங்களும் விதிமுறைகளும் வரையப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஓபன் ஏஐ, அந்த்ரோபிக் நிறுவனங்களின் ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதெனக் கருத்துத் தெரிவித்தனர்.
அதன்பிறகு, அதனை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்த ஆய்வுகளில் பொதுவாக சம்பந்தப்படாத அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதற்கான சட்டதிருத்தங்களை விரிவாக வடிவமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேகப் கொக்சன் அவரது நிறுவனத்தையும் ஓபன்ஏஐ நிறுவனத்தையும் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அவை கவனம் செலுத்தினாலும் அதனால் விளையும் பாதுகாப்பு அபாயங்களைப் பொறுப்பாக ஆராயவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையைவிட்டு விலகுவதாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அறிவித்த திரு கொக்சனின் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்தது. அதோடு, அந்த்ரோபிக் நிறுவனத்தின் விஞ்ஞானி இவான் ஹியுபிங்கர், கொக்சனின் கருத்துகள் சரியானதே என்று ஆமோதித்துப் பதிவிட்டார்.
“ஏஐ மனிதர்களைக் கொல்லக்கூடியது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது அடுத்த 10 ஆண்டுகளில் நடக்கும் சாத்தியம் 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது,” என்று திரு ஹியுபிங்கர் அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுகள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. செனட் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தலைவர் ஜான் துனேயும் ஜனநாயகக் கட்சியின் ஏமி குளோபுசாரும் தற்போது செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களை முறைப்படுத்துவதற்கான மசோதாவைத் தயார் செய்துவருகின்றனர்.
அதன்படி ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நிறுவனங்கள் அரசாங்க நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து அவை பாதுகாப்பாக உள்ளதை உறுதிசெய்ய அவற்றைச் சரிபார்ப்பதும் சோதனைகள் மேற்கொள்வதும் கட்டாயமாக்கப்படும்.
பேரழிவை ஏற்படுத்தும் அபாயங்கள் அரசாங்கத்தின் ஏஐ துறை சார்ந்த செயல்பாடுகளால் தவிர்க்கப்படும் என்று திரு துனே ஜுலை மாதம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
ஓபன் ஏஐ நிறுவனமும் தேசிய அளவில் பாதுகாப்பு விதிமுறைகள் அவசியம் என்று வியாழக்கிழமை (செப்டம்பர் 9) அறிவித்தது.

