வாஷிங்டன்: கியூபா மீதான தனது பொருளியல் தடைகளை அமெரிக்கா புதன்கிழமை (ஜூன் 10) தற்காத்துப் பேசியுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் மக்களுக்குப் பரவலான தீங்கினை ஏற்படுத்துவதோடு உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துவதற்கான ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்ததை அடுத்து டிரம்ப்பின் நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பைக் கீழறுத்துச் சீர்குலைக்க கியூபா நடத்தும் தீய நோக்கம் கொண்ட பிரசாரத்திற்கு ஆதரவளிக்கும் தலைவர்களையும் அமைப்புகளையுமே இந்தத் தடைகள் குறிவைப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கியூபாவின் கம்யூனிசத் தலைவர்கள் மீதான நெருக்குதலைத் தீவிரப்படுத்தும் முயற்சியாக அமெரிக்கா இந்தத் தடைகளை விதித்துள்ளது.
கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் சுங்கவரிகளை விதிக்கும் வகையில், இந்த ஆண்டு அமெரிக்கா தேசிய அவசரநிலையை அறிவித்ததைத் தொடர்ந்தே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையினால் கியூபாவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் கியூபா மக்களின் மனித உரிமைகளைப் பாதிப்பதாகவும், குறிப்பாக நீர், உணவு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளைப் பெறுவதைப் பாதிப்பதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் வோல்கர் டர்க் திங்களன்று தெரிவித்தார்.
நாட்டின் ஒட்டுமொத்தத் துறைகளையும் குறிவைத்து, மக்கள்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய கடுமையான தடைகள், அனைத்துலக மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணான இருப்பதாகத் திரு டர்க் கூறினார்.
கியூபாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியிருந்ததைச் சுட்டிய வெள்ளை மாளிகை, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

