வெனிசுவேலா அதிபரைப் பயங்கரவாதி என வகைப்படுத்திய அமெரிக்கா

வெனிசுவேலா அதிபரைப் பயங்கரவாதி என வகைப்படுத்திய அமெரிக்கா

1 mins read
d2cdf080-1356-490a-90be-26f1178c4942
வெனிசுவேலாவின் அதிபர் நிக்கலஸ் மடுரோ,  ‘கார்ட்டெல் டெ லோஸ் சோலெஸ்’ குழுவுக்குத் தலைமையேற்பதாகக் கூறுகிறது அமெரிக்கா - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: வெனிசுவேலாவின் அதிபர் நிக்கல்ஸ் மடுரோ தலைமையேற்பதாகக் கூறப்படும் ‘கார்ட்டெல் டெ லோஸ் சோலெஸ்’ எனும் குழுவைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இம்மாதம் (நவம்பர் 2025) 24ஆம் தேதியிலிருந்து அது வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் என்று அமைச்சு தெரிவித்தது. அதன் தொடர்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதன்படி, திரு மடுரோவும் பயங்கரவாதி என வகைப்படுத்தப்படுவார். ‘கார்ட்டெல் டெ லோஸ் சோலெஸ்’ குழுவுக்கு அவர் தலைமையேற்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், திரு மடுரோ அதனை மறுக்கிறார்.

போதைப்பொருள் கடத்தலைக் குறைத்துத் திரு மடுரோவுக்கு நெருக்குதல் அளிக்கத் திரு டிரம்ப்பின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஆக அண்மை நடவடிக்கை அது. வெனிசுவேலாவுக்குள் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

அமெரிக்கா ஏற்கெனவே அந்தக் குழு மீது தடைகளை விதித்திருந்தது. ஆனால் புதிய அறிவிப்பு, அதற்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வழிவிடும்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் குற்றக்கும்பலை, ‘கார்ட்டெல் டெ லோஸ் சோலெஸ்’ குழு என்று அமெரிக்கா குறிப்பிடுகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், என்ன செய்யவேண்டும் என்ற முடிவைக் கிட்டத்தட்ட எடுத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் இன்னும் அவரின் முடிவை அமெரிக்க அதிபர் அறிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்