ஈரான்மீது 2,000 பவுண்ட் எடையுள்ள குண்டை வீசிய அமெரிக்கா

ஈரான்மீது 2,000 பவுண்ட் எடையுள்ள குண்டை வீசிய அமெரிக்கா

படம்: ராய்ட்டர்ஸ்

01 Aug 2026 - 7:14 pm

2 mins read

வா‌ஷிங்டன்: ஈரானில் உள்ள கி‌‌‌ஷாம் தீவின்மீது அமெரிக்கா மிகப் பெரிய குண்டு ஒன்றை வீசித் தாக்கியுள்ளதாக ஆயுத வல்லுநர்களும் நியூயார்க் டைம்ஸ் நாளேடும் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலில் கணவன், மனைவி, இரண்டு வயது மகன் உள்ளிட்டோர் மாண்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாண்ட தம்பதியின் மேலும் இரண்டு பிள்ளைகள் கட்டட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டனர்.

அமெரிக்கா போட்ட மார்க்-84 என்ற குண்டு கிட்டத்தட்ட 2,000 பவுண்ட் எடையுடையது என்று அறியப்படுகிறது. அது அமெரிக்கா பயன்படுத்தும் ஆகப் பெரிய குண்டுகளில் ஒன்று.

அமெரிக்கா ஏன் அவ்வளவு பெரிய குண்டைப் போட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தீவில் மக்கள்தொகை அதிகம் உள்ள இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்கா தொடுத்த தாக்குதலில் ஏறக்குறைய 20 அக்கம்பக்க வீடுகள் சேதமடைந்ததாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, ஈரான்மீது புதிய தாக்குதல்களை இந்த வார இறுதியில் தொடுக்க அமெரிக்கா திட்டமிடுவதாக தகவல் அறிந்த அமெரிக்க அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை அவர்கள் பகிர்ந்துகொள்ளவில்லை. அதேவேளை, அது கைவிடப்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

ஜூலை 31ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பலத்த தாக்குதலுக்கான முன்னோட்டத்தைப் பார்வையிட்டதுடன் சரிவர செயல்படாத அரசதந்திர முயற்சிகளைச் சாடினார்.

அதையடுத்து, போரை விரிவுபடுத்த அமெரிக்க மத்தியத் தளபத்தியம் தயாராகியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தளங்கள்மீது இரண்டு வாரங்களுக்குப் பலத்த தாக்குதலைத் தொடுக்க அது திட்டமிட்டுள்ளது.

எரிசக்தித் தளங்களைக் குறிவைத்து தாக்குவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் தளபத்தியம் குறிப்பிட்டது.

வளைகுடா உள்கட்டமைப்புத் தளங்களுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தி அனைத்துலக எரிசக்திச் சந்தையைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தால் திரு டிரம்ப் அரசாங்கம் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புமீது தாக்குதல் நடத்தத் தயங்குகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஈரான்தாக்குதல்குண்டுவீச்சு