தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்

2 mins read
aefe3d37-3d77-4cee-8dbc-55cd127c9b9c
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் (வலது) பேச்சுவார்த்தை நடத்திய ஐரோப்பியக் குழுமத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன். - படம்: ராய்ட்டர்ஸ்

டர்ன்பெரி (பிரிட்டன்): அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஐரோப்பிய ஒன்றிய வட்டாரத்திலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 15 விழுக்காடு வரி விதிக்கப்படும். அந்த விகிதம், 30 விழுக்காடாக இருக்கும் என்று முன்னதாக அமெரிக்கத் தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனால், பங்காளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு, உலக வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும்.

ஐரோப்பியக் குழுமத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள திரு டிரம்ப்புக்குச் சொந்தமான கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

“இந்த ஒப்பந்தம், இதுவரை எட்டப்படாத ஆகப் பெரியது என நான் நினைக்கிறேன்,” என்று திருவாட்டி வொன் டெர் லேயனுடன் நடந்த ஒரு மணிநேர சந்திப்புக்குப் பிறகு திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். 15 விழுக்காடு வரிவிதிப்பு, எல்லா பொருள்களுக்கும் பொருந்தும் என்று திருவாட்டி வொன் டெர் லேயன் தெரிவித்தார்.

“உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல்களுக்கிடையே நாங்கள் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். இது மிகப் பெரிய ஒப்பந்தமாகும். இது, நிலைத்தன்மையைக் கொண்டுவரும். என்ன நடக்கும் என்பதைக் கணிக்கக்கூடிய சூழலை உருவாக்கும்,” என்றார் அவர்.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் (768 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும். அதோடு, அமெரிக்காவின் எரிசக்தி, ராணுவப் பொருள்களை ஐரோப்பிய ஒன்றியம் வாங்கும்.

இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு தெளிவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, திங்கட்கிழமையன்று (ஜூலை 28) பிரிட்டி‌ஷ் பிரதமர் கெயர் ஸ்டாமர், ஸ்காட்லாந்தில் திரு டிரம்ப்பைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு தரப்புக்கம் இடையே அண்மையில் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம், காஸாவில் மோசமடைந்துவரும் பட்டினிப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்