நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் சாண்டோஸுக்கு பிரசார நிதியைத் திருடியதற்காக ஏழாண்டு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயது சான்டோஸுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி மத்திய ஐஸ்லிப் நகரில் தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி அவர் செய்தது அப்பட்டமான திருட்டு என்று குறிப்பிட்டார்.
திரு சான்டோஸின் வழக்கறிஞர் ஈராண்டு சிறை விதிக்கப்படும்படி கேட்டுக்கொண்டபோதும் நீதிபதி சான்டோஸ் மத்தியக் காவல்துறையிடம் ஜூலை 25ஆம் தேதிக்குள் சரணடையும்படி உத்தரவிட்டார்.
முன்னாள் வழக்கறிஞரான சான்டோஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓராண்டுக்கும் குறைவாகப் பதவி வகித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் நடத்தைக் குழு திருட்டு, வஞ்சகம் ஆகியவற்றுக்காக விசாரணை நடத்தியதை அடுத்து சான்டோஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இணைய மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, பொது நிதியைத் திருடியது என 23 குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தொடக்கத்தில் சான்டோஸ்மீது சுமத்தினர்.
வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைய மோசடி, திருட்டு தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளை சான்டோஸ் ஒப்புக்கொண்டார்.
சான்டோஸ் ஒரே நேரத்தில் ஐந்து வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் பணம் கொள்ளையடித்தோரில் உடற்குறையுள்ளோரும் மூத்தோரும் அடங்குவர் என்றும் அரசாங்க வழக்கறிஞர் ராயன் ஹாரிஸ் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சான்டோஸ் அடுக்கடுக்கான பொய்கள் மூலம் ஆக உயரிய பதவிகளுக்கு உயர்ந்தவர் என்று திரு ஹாரிஸ் நீதிபதியிடம் சொன்னார்.
சமூக ஊடகப் பதிவுகள் மூலம் சான்டோஸ் செய்த தவற்றுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் வருத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் சொன்னார்.
தண்டனை விதிக்கப்படும் முன் சான்டோஸ் நீதிபதியிடம் இரக்கம் காட்டும்படி கேட்டுக்கொண்டார். “நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

