நியூசிலாந்தில் அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் புதிய அலுவலகம்

2 mins read
0da2a3e7-4150-4314-8452-651c2f2ea800
பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது தொடர்பான கவலை நிலவும் வேளையில் நியூசிலாந்தும் அமெரிக்காவும் மேலும் அணுக்கமாகப் பணியாற்றுகின்றன. - படம்: புளூம்பெர்க்

வெலிங்டன்: அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு அமைப்பு (FBI), நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

தனித்து இயங்கக்கூடிய இந்தப் புதிய அலுவலகம், பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கும் நியூசிலாந்திற்கும் உதவும் என்று அமைப்பின் இயக்குநர் காஷ் பட்டேல் வியாழக்கிழமை (ஜூலை 31) கூறினார்.

தென்மேற்குப் பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் முக்கியப் பங்காளித்துவ நாடுகளில் ஒன்றான நியூசிலாந்துடன் அமெரிக்காவின் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்த அலுவலகம் உதவும் என்றார் திரு பட்டேல். நியூசிலாந்தும் அமெரிக்காவும் சில முக்கியமான உலகளாவிய விவகாரங்களில் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் நடவடிக்கைகள், போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவை தொடர்பான பதில் நடவடிக்கைகளை அவர் சுட்டினார். மேலும், இணைய ஊடுருவல் சம்பவங்கள், பிணைநிரல் சம்பவங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் குறிப்பாக இரு நாட்டுக் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அமெரிக்காவும் நியூசிலாந்தும் கூட்டாகச் செயல்படுவதாகத் திரு பட்டேல் குறிப்பிட்டார். வெலிங்டனில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் உரையாற்றும் காணொளி வெளியிடப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் ‘எஃப்பிஐ’ அமைப்பின் கிளை அலுவலகம் நியூசிலாந்தில் இயங்கிவந்தது. இரு நாடுகளும் திட்டமிட்ட குற்றச்செயல்கள், நியாயமற்ற முறையில் சிறாருக்குத் தீங்கிழைத்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் அணுக்கமாகப் பணியாற்றிவருகின்றன.

பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது தொடர்பான கவலை நிலவும் வேளையில் இவ்விரு நாடுகளும் மேலும் அணுக்கமாகப் பணியாற்றுகின்றன. ஐந்து நாடுகளுக்கு இடையிலான உளவுத் தகவல் பங்காளித்துவத்தில் (Five Eyes) இரு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகியவை மற்ற மூன்று நாடுகள்.

குறிப்புச் சொற்கள்