வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. மத்திய வங்கியின் புதிய தலைவரான கெவின் வார்ஷ் தலைமையில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற கூட்டத்தில், ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் மாதங்களில் கடன் வாங்குவதற்கான செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனது ஆட்சியில் பொருள்களின் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
இருப்பினும், அவர் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்குப் பிந்தைய எரிசக்தி அதிர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பெருவளர்ச்சியால் ஏற்பட்ட மூலதனச் செலவினங்கள் ஆகியவை விலையேற்ற அழுத்தத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளன.
இதன் காரணமாக, தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.25% விழுக்காட்டுப் புள்ளி உயர்த்தி, 3.75 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காட்டுக்கான வரம்பிற்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய வங்கிக்கு ஏற்பட்டது.
வெளியிடப்பட்டுள்ள காலாண்டுப் பொருளியல் மதிப்பீடுகளின்படி, கொள்கை அமைப்பாளர்களான 18 பேரில் 16 பேர், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் மேலும் 0.25 விழுக்காட்டுப் புள்ளி வட்டி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இருவர் மட்டுமே வட்டி விகிதம் இதோடு நிலையாக இருக்கும் எனக் கருதுகின்றனர். மேலும், ஒருவர் தவிர மற்ற அனைவரும் பணவீக்க ஆபத்து தொடர்ந்து மேலோங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
