குடியேற்றத்துடன் தொடர்பில்லா 80,000 விசாக்களை ரத்து செய்த அமெரிக்க அரசாங்கம்

குடியேற்றத்துடன் தொடர்பில்லா 80,000 விசாக்களை ரத்து செய்த அமெரிக்க அரசாங்கம்

2 mins read
226065d0-237e-40d3-927d-23a12468ffb2
மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அடிதடியில் ஈடுபட்டது, திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: குடியேற்றத்துடன் தொடர்பில்லாத ஏறத்தாழ 80,000 விசாக்களை அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று அமெரிக்க அதிபராகத் திரு டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து இத்தனை பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை.

மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அடிதடியில் ஈடுபட்டது, திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் இவ்வாண்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததும் குடியேறிகள் பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களில் பலர் தங்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்டோரில் செல்லுப்படியான விசாக்களை வைத்திருந்தவர்களும் அடங்குவர்.

விசா வழங்குவது தொடர்பான விதிமுறைகளையும் அமெரிக்க அரசாங்கம் கடுமையாக்கியது.

இந்நிலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காகக் கிட்டத்தட்ட 16,000 குடியேறிகளின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

அடிதடியில் ஈடுபட்ட 12,000 குடியேறிகள் தங்கள் விசாக்களை இழந்தனர்.

அதேபோல, திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்ட 8,000 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த மூன்று குற்றங்கள் காரணமாக விசாக்களை இழந்தோர் எண்ணிக்கை விசாக்கள் ரத்து செய்யப்பட்டோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 50 விழுக்காடாகும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி கூறினார்.

அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தைவிட கூடுதலான நாள்கள் அமெரிக்காவில் தங்கியதற்காகவும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்த மாணவர்கள் சிலரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த பழைமைவாத ஆர்வலர் சார்லி கெர்க் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது படுகொலை பற்றி சமூக ஊடகத்தில் முறையற்ற வகையில் கருத்து பதிவிட்டவர்களில் குறைந்தது அறுவரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கானோரின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரானவையாக இருந்ததாகவும் அதன் காரணமாக அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடந்த மே மாதம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்