தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கநிலை அடுத்த வாரமும் தொடரும் நிலை

2 mins read
9be3367e-4ac9-48db-8815-345d3c7a6865
வா‌ஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம். - படம்: ராய்ட்டர்ஸ்.

வா‌ஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கநிலை அடுத்த வாரமும் தொடரும் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தின் நிதி நிலைமை மிகவும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதே அதற்குக் காரணம்.

நாடாளுமன்ற முடக்கம் அடுத்த வாரமும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் முன்வைத்த நிதித் திட்டத்தை நான்காவது முறையாக செனட்டர்கள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) நிராகரித்தனர். புதன்கிழமையிலிருந்து (அக்டோபர் 1) மத்திய அரசாங்க அமைப்புகளிடம் பணம் இல்லை. பல பொதுச் சேவைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. வேலைவாயப்புக் குறித்த முக்கியத் தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. சில அதிகாரத்துவ இணையத்தளங்கள் இயங்கவில்லை. அரசாங்கத்தின் மற்றப் பகுதிகள் இன்னும் பாதிக்கப்படவில்லை.

நிதி நெருக்கடி காரணமாக, கிட்டத்தட்ட 750,000 ஊழியர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுவர் என்று அஞ்சப்படுகிறது. வார இறுதியில் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தும் திட்டம் எதுவும் செனட் தலைவர்களிடம் இல்லை. இழுபறிக்கு முக்கியக் காரணம் சுகாதாரப் பராமரிப்பு உதவித்தொகை தொடர்புடைய விவகாரம். குறைந்த வருமானம் ஈட்டும் மில்லியன்கணக்கான அமெரிக்கர்களுக்கு அந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. விரைவில் காலாவதியாகவிருக்கும் உதவித் திட்டத்தை நீட்டிக்கவேண்டும் என்கிறது ஜனநாயகக் கட்சி. இல்லையென்றால் மருத்துவக் கட்டணங்கள் வெகுவாகக் கூடும் என்று அது கூறுகிறது.

மன்றமும் வெள்ளை மாளிகையும் குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆயினும் அரசாங்கச் செலவின மசோதாக்களுக்கு ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு தேவை. சுகாதாரப் பராமரிப்பு உதவித்தொகை விவகாரத்தைப் பரிசீலிக்கும் திட்டமில்லை என்று குடியரசுக் கட்சி கூறுகிறது.

தற்போதைய முடக்கநிலையால் அமெரிக்க அதிபர் ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து எந்த நேரத்திலும் அறிவிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்