வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் முடங்கிய அமெரிக்க அரசாங்கம்

வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் முடங்கிய அமெரிக்க அரசாங்கம்

2 mins read
95ee3b8e-f402-4cad-a2d3-1c26c64a29e3
அமெரிக்க நாடாளுமன்றம், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கத் தவறியதை அடுத்து அமெரிக்க அரசாங்கல் முடங்கியது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றம், இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்குக் குறிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஒப்புதல் அளிக்கத் தவறியதை அடுத்து அந்நாட்டு அரசாங்கத்தின் சில செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

செனட் சபையின் ஆதரவுள்ள திட்டத்துக்கு அடுத்த வாரத் தொடக்கத்துக்குள் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என்பதால் முடக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மினியாபொலிஸ் நகரில் மத்திய குடிநுழைவு அதிகாரிகள் சுட்டுக்கொன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய விமர்சனத்தை அடுத்து வரவுசெலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் தள்ளிப்போனது.

குடியேறிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னிட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி சலசலப்பு ஏற்பட்டது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், பிள்ளைகளை வன்கொடுமை செய்வோர், ஆள்கடத்தலில் ஈடுபடுவோர் ஆகியோரைப் பிடிப்பதற்குப் பதிலாகத் திரு டிரம்ப்பின் அரசாங்கம் விலைமதிப்பில்லாத வளங்களைச் சிகாகோ, மினியாபொலிஸ் ஆகிய பகுதிகளில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வோரைக் குறிவைப்பதில் கவனமாக உள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மை குறடா டிக் டர்பின் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

திரு டிரம்ப்பின் அரசாங்கம் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வைத் தந்துகொண்டிருக்கிறது என்றார் அவர்.

வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றாததால் அரசாங்கத்தின் முக்கால் பகுதி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, தற்காப்பு ஆகிய அமைச்சுகளில் உள்ள அமைப்புகளும் செயல்பாடுகளும் கட்டங்கட்டமாக முடக்கப்பட்டன.

அடுத்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றம் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் ஓரிரு நாள்களில் வெவ்வேறு துறைகளுக்கான நிதி வழங்கப்படும்.

ஒருவேளை, அரசாங்க முடக்கம் ஓரிரு நாள்களுக்கு மேல் நீடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்