$210 மி. மதிப்பிலான 1எம்டிபி நிதியை மலேசியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

$210 மி. மதிப்பிலான 1எம்டிபி நிதியை மலேசியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

2 mins read
1c67e22e-2a01-4f3c-92a9-e446d53a8b96
இதுவரை, 1எம்டிபி மோசடியில் தொடர்புடைய ஏறக்குறைய US$1.4 பில்லியன் நிதியை அமெரிக்க அதிகாரிகள் மீட்டு, ஒப்படைத்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: அமெரிக்க அரசாங்கம், 1எம்டிபி மோசடியில் தொடர்புடைய மேலும் 156 மில்லியன் அமெரிக்க டாலர்(S$210.8 மில்லியன்) நிதியை மலேசியாவிடம் ஒப்படைத்துள்ளது.

இதுவரை மொத்தம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை மீட்டு, ஒப்படைத்திருப்பதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஜூன் 13ஆம் தேதி தெரிவித்துள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, அமெரிக்க நீதித் துறை இவ்வாறு மீட்கப்பட்ட தொகையை மலேசியாவிடம் ஒப்படைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

“மோசடி செய்யப்பட்ட இந்தப் பேரளவுத் தொகை மலேசிய மக்களைச் சென்றடைகிறது. ஏற்கெனவே இலக்கு வகுத்தவாறு, மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படலாம்,” என்று மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி. ககன் கூறினார்.

இதுகுறித்து மலேசியப் பிரதமர் அலுவலகம் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

மலேசிய, அமெரிக்க அதிகாரிகள், 1எம்டிபி நிதியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி மோசடி செய்யப்பட்டதாக மதிப்பிட்டுள்ளனர்.

இதில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கோல்ட்மன் சேக்ஸ் வங்கியின் ஊழியர்கள் உட்பட உயரதிகாரிகள் பலர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதர் ககன், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமை ஜூன் 11ஆம் தேதி சந்தித்து, நிதி ஒப்படைக்கப்படுவது குறித்து உறுதியளித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

நான்காவது முறையாக, மீட்கப்பட்ட பணம் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுவதாகத் தூதர் ககன் குறிப்பிட்டதாக பெர்னாமா கூறியது.

நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியதாகக் கூறப்பட்டது.

பணம் யாருடையது, எங்கிருந்து வருகிறது என்பன போன்ற விவரங்களை மறைத்து அனுப்பப்பட்டதாகவும் பின்னர் அதைப் பயன்படுத்தி அமெரிக்காவிலும் மற்ற வெளிநாடுகளிலும் சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மலேசியர்களுக்குப் பயன்பட வேண்டிய 1எம்டிபி நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு, மீண்டும் ஒப்படைக்க அமெரிக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்