வாஷிங்டன்: அமெரிக்கா, வர்த்தகக் காரணங்களுக்காக லாரி ஓட்டுபவர்களுக்கு வேலை அனுமதி விசா வழங்குவதை உடனடியாக நிறுத்துவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவில் கனரக லாரிகளை ஓட்டும் வெளிநாட்டு ஓட்டுநர்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அமெரிக்கர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது, அமெரிக்க லாரி ஓட்டுர்களின் வாழ்வாதாரத்துக்குப் பங்கம் விளைவிக்கிறது,” என்று திரு ருபியோ வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
ஆங்கிலம் பேசத் தெரியாத வெளிநாட்டு லாரி ஓட்டுநர்கள் குறித்த குறைகளைக் கையாளும் நோக்கில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் வர்த்தகக் காரணங்களுக்காக லாரி ஓட்டுநர்களாகப் பணிபுரிவோர் ஆங்கில மொழிப் பயன்பாடு தொடர்பான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கு வழிவகுக்கும் ஆணையில் திரு டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டார்.
அண்மையில் ஃபுளோரிடா மாநில விரைவுச்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் கொல்லபப்ட்டனர். அதில் சிக்கிய லாரி ஓட்டுநர் இந்தியாவைச் சேர்ந்தவர். ஆங்கிலம் பேசத் தெரியாத அவர் அமெரிக்காவில் இருக்க தகுந்த உரிமம் பெறாதிருந்தார்.
வாகனத்தைக் கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஹர்ஜிந்தர் சிங் எனும் அந்த ஓட்டுநர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.