நிக் ஆடம்சுக்குப் பதிலாக வேறொருவரை மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்க அமெரிக்கா முடிவு

நிக் ஆடம்சுக்குப் பதிலாக வேறொருவரை மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்க அமெரிக்கா முடிவு

2 mins read
085dae83-b0b0-4f3f-8039-09c7251d98c6
மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக நிக் ஆடம்ஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து, மலேசியாவில் எதிர்ப்பு கிளம்பியது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக சர்ச்சைக்குரிய ஆஸ்திரேலிய-அமெரிக்க வர்ணனையாளர் நிக் ஆடம்சை நியமிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த எண்ணத்தை அது கைவிட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக ஒரு தொழில்முறை தூதரக அதிகாரி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரு. ஆடம்சின் நியமனம் அறிவிக்கப்பட்டபோது, அவரது தீவிர வலதுசாரி பேச்சுக்களுக்காகப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்டதாகக் கருதப்படும் அவரது கருத்துகள், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவுக்குப் பொருந்தாது என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

திரு ஆடம்ஸ் இனி வெள்ளை மாளிகையால் நியமிக்கப்பட்ட மலேசியத் தூதர் அல்ல என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, தான் இன்னும் அறிவிக்கப்படாத ஓர் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக ஆடம்ஸ் கூறியதாக ஆஸ்திரேலியாவின் ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எக்ஸ் தளத்தில் ‘முக்கிய அறிவிப்பு விரைவில் வரும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மலேசிய அரசாங்கத்தின் அங்கமான ஜனநாயகச் செயல் கட்சியின் சமத்துவ இளையர் பிரிவின் துணைத் தலைவர் திரு. இஸ்கந்தர் ஃபாரீஸ், இந்தச் செய்தியை ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“வர்த்தக வரி விதிப்புகளால் நிச்சயமற்ற சூழல் நிலவும் வேளையில், நிக் ஆடம்ஸ் போன்ற பிளவுகளை உண்டாக்கும் ஒருவருக்கு மலேசியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தூதரக உறவுகளில் இடமில்லை,” என்று ஆடம்சுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான திரு இஸ்கந்தர் கூறினார்.

புதிதாக நியமிக்கப்படுபவர் மலேசியாவின் கலாசார நுணுக்கங்களைப் புரிந்து கொண்டவராகவும், சர்ச்சைகளுக்குப் பதிலாக நீண்டகால தூதரக அனுபவங்களைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்