ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிடில் கடுந்தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிடில் கடுந்தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை

2 mins read
14aa1f06-4b01-465c-9ba4-76a287631db7
உலகளாவிய கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்திற்கு முக்கிய வழியாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை விரைவில் மீண்டும் திறக்காவிடில் ஈரானைக் கடுமையாகத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஈரான், ஓமான் ஆகிய நாடுகள் நெருங்கி வருவதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது திரு டிரம்ப் தெரிவித்தார்.

“ஹோர்முஸ் நீரிணை மிக விரைவில் திறக்கப்படும் அல்லது ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும். அதன்பின் நீரிணை திறக்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்திற்கு முக்கிய வழியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மீண்டும் சண்டை மூள்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் 2028 பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான்மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து நீடிக்கும் இந்த மோதலுக்கு முடிவுகட்ட ஈரான் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகத் திரு டிரம்ப் கூறினார்.

“பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும், செயல்பாடுகள் மட்டுமே முக்கியம். அவர்கள் உடன்பாட்டை எட்ட விரும்புகின்றனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எனக்குப் போதுமான நேரம் இருக்கிறது,” என்றார் அதிபர் டிரம்ப்.

முன்னதாக, வட்டார அதிகாரிகளையும் அமெரிக்க அதிகாரி ஒருவரையும் மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டது.

அதில், ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட நீரிணைப் பகுதியில் பாதுகாப்பான போக்குவரத்திற்கான 60 நாள் ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணங்கள் எதுவும் செலுத்தத் தேவையிராத அந்த ஒப்பந்தம் பின்னர் நீட்டிக்கப்படலாம் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வளைகுடாவிற்குள் செல்லும் அனைத்துக் கப்பல்களும் வடக்குக் கடல்வழியைப் பயன்படுத்தும்; வெளியேறும் கப்பல்கள் ஓமானின் எல்லைக்குட்பட்ட தெற்குக் கடல்வழியைப் பயன்படுத்தும்.

குறிப்புச் சொற்கள்
ஹோர்முஸ்நீரிணைஅமெரிக்காஈரான்டோனல்ட் டிரம்ப்