வாஷிங்டன்: பண்ணைத் தொழில், ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவற்றில் சோதனைகளையும் கைதுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு குடிநுழைவு அதிகாரிகளிடம் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் நிர்வாகம் கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) செய்தி வெளியிட்டுள்ளது.
“இன்று முதல், விவசாயம் (மீன்வளர்ப்பு மற்றும் இறைச்சி பொட்டலமிடும் ஆலைகள் உட்பட), உணவகங்கள், ஹோட்டல்கள் தொடர்பான அனைத்து பணியிட அமலாக்க நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கவும்,” என்று குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவின் மூத்த அதிகாரி டாட்டம் கிங், துறையின் வட்டாரத் தலைவர்களுக்குத் தெரிவித்துள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் மேலும் கூறியது.
இந்த அறிக்கையை உறுதிப்படுத்தியதுடன், “நாங்கள் அதிபரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம். மேலும் அமெரிக்காவின் தெருக்களில் இருந்து மோசமான குற்றவாளிகளான சட்டவிரோத வெளிநாட்டினரை வெளியேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது.
இந்த அறிக்கையை ராய்ட்டர்ஸ் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. வழக்கமான வேலை நேரத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்குமாறு ராய்ட்டர்ஸ் விடுத்த கோரிக்கைக்கு வெள்ளை மாளிகையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் உடனடியாக பதிலளிக்கவில்லை.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பெரிதும் நம்பியுள்ள அமெரிக்காவின் பண்ணை, ஹோட்டல் தொழில்களில் தனது குடியேற்ற தடுப்பு நடவடிக்கைகளின் விளைவுகளை நிவர்த்தி செய்ய விரைவில் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கப்போவதாக அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை கூறியதை அடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
அமெரிக்க பண்ணைத் தொழில்துறை குழுக்கள் நீண்டகாலமாக திரு டிரம்ப் தங்கள் துறை ஊழியர்கள் அதிக அளவில் நாடுகடத்தப்படுவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. இது வெளிநாட்டினரை நம்பியிருக்கும் உணவு விநியோகச் சங்கிலியை மேம்படுத்தக்கூடும் என்று அவை கூறுகின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அதிபர் டிரம்ப் தனது பிரசார வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார். ஆனால், லாஸ் ஏஞ்சலிசில் கடந்த வாரம் நடந்த போராட்டங்களைத் தூண்டிய வேலைவாய்ப்பு இடங்கள் உட்பட, குற்றவாளிகள் அல்லாதவர்களைக் குறிவைப்பது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களும் சில டிரம்ப் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.