60 நாடுகளுக்கு அமெரிக்கா 10-12.5% புதிய இறக்குமதி வரி

60 நாடுகளுக்கு அமெரிக்கா 10-12.5% புதிய இறக்குமதி வரி

2 mins read
842ac09b-addc-4cf0-99a9-4912b62c8a70
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் வியாழக்கிழமை (ஜூலை 23) இந்தப் புதிய வரிகளை அறிவித்தார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: தொழிலாளர்களை வலுக்கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது தொடர்பான கவலைகளைச் சுட்டிக்காட்டி, தனது 60 வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இந்த வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட முக்கியப் பொருளியல் நாடுகள் இதனால் பாதிக்கப்படும். இப்புதிய இறக்குமதி வரி 10 விழுக்காடு முதல் 12.5 விழுக்காடு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னர் கொண்டுவந்த 10 விழுக்காட்டு உலகளாவிய தற்காலிக வரி 150 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. அதற்குப் பதிலாகவே இந்தப் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திரு டிரம்ப் விதித்த பல வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரியில் ரத்து செய்தது. நீதிமன்றச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பலமான புதிய வர்த்தகக் கொள்கைகளை அமெரிக்க நிர்வாகம் பல மாத ஆய்வுக்குப் பிறகு தீவிரமாக வகுத்து வருகிறது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் இந்தப் புதிய வரிகளை அறிவித்தார். தொழிலாளர்களை வலுக்கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்கு அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகத் தடை விதித்து வருகிறது என்றும் வர்த்தகப் பங்காளிகளும் அவ்வாறே செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார். 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301ன்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

வலுக்கட்டாய உடலுழைப்புக்குத் தடை விதித்துள்ள கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் போன்ற பொருளியல்களுக்குக் குறைந்த அளவாக 10 விழுக்காட்டு வரி விதிக்கப்படும். அத்தகைய தடைகளைச் செயல்படுத்தாத சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு 12.5 விழுக்காட்டு வரி பொருந்தும்.

அதேநேரத்தில், அமெரிக்காவுடன் ஏற்கெனவே உடன்பாடு செய்துகொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தைவான், சுவிட்சர்லாந்து போன்றவற்றுக்கு வரிவிதிப்பில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எஃகு, அலுமினியம், சில எரிசக்திப் பொருள்கள், உரங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தாது.

அண்மையில் பிரேசிலியப் பொருள்களுக்கு 25 விழுக்காட்டு வரியும், கனடியப் பொருள்களுக்கு 50 விழுக்காட்டு வரியும் அமெரிக்கா விதித்தது. தொழில்துறை மிதமிஞ்சிய உற்பத்தி தொடர்பாக மேலும் 16 நாடுகளை அமெரிக்கா விசாரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்தத் தன்னைப்பேணிக் கொள்கை, அனைத்துலக வர்த்தக உடன்பாடுகளை மேலும் பலவீனமாக்கியுள்ளது. அரசாங்கத்தின் வருவாயை உயர்த்தவும் இந்த வரி நடவடிக்கை உதவும் எனப் பொருளியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலக அளவில் மிகப்பெரிய பொருளியல் நாடான அமெரிக்கா, மீண்டும் தனது வர்த்தகக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருவது, உலக வர்த்தக அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
வரிஅமெரிக்காஇறக்குமதி