வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராய்க் கடுந்தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
அண்மையில் அமெரிக்கப் படையினர்மீது சிரியா தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக அது அமைந்துள்ளது.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகளும் சிரியாவின் மத்திய பகுதியில் 70க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது. ஜோர்தானிலிருந்து சென்ற விமானங்களும் அமெரிக்கத் தாக்குதலில் சேர்ந்துகொண்டன.
ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான உள்கட்டமைப்புகளையும் ஆயுதத் தளங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட வெடிபொருள்களைக் கொண்டு குறிவைத்துத் தாக்கியதாக அமெரிக்கத் தளபத்தியம் கூறியது.
சிரியாவின் பால்மைரா நகரில் இம்மாதம் (டிசம்பர் 2025) 13ஆம் தேதி ஐஎஸ் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்கப் படைவீரர்கள் இருவரும் அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் மாண்டனர். அதனைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்பு கோட்டையாகக் கருதும் இடங்களில் மிகவும் கடுமையான தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அண்மைத் தாக்குதல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) மாலை தொடங்கியதாக ராணுவ நடவடிக்கைகளை நடத்தும் சென்ட்காம் அமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்கர்களையும் அமெரிக்காவின் நண்பர்களையும் துன்புறுத்த முற்படும் பயங்கரவாதிகளை வாஷிங்டன் தொடர்ந்து குறிவைக்கும் என்று சென்ட்காம் அமைப்பின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் சொன்னார்.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, போரின் தொடக்கமல்ல என்றும் அது பதிலடி என்றும் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
உலகின் எந்தப் பகுதியில் அமெரிக்கர்கள் குறிவைக்கப்பட்டாலும் அவ்வாறு செய்வோர் வெகு விரைவில் தேடப்பட்டு அழிக்கப்படுவது உறுதி என்றார் அவர்.
அமெரிக்கர்கள்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சிரியாவின் அரசாங்கம் அதற்கு முழு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிரியாவின் ரக்கா, டெய்ர் எஸ் ஸோர் நகரங்களுக்கு அருகில் ஐஎஸ் இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிரியாவின் மனித உரிமை ஆய்வகம் கூறியுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரும் போராளிகள் பலரும் அதில் கொல்லப்பட்டதாக ஆய்வகம் தெரிவித்தது.
ஐஎஸ் அமைப்பு அது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

