ஹியூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இவ்வாரம் நடைபெறும் ஜி20 எரிசக்தி உச்சநிலை மாநாட்டில் வெனிசுவேலா பங்கேற்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்குப் போரால் உலகின் எரிசக்தி விலைகள் விண்ணைத் தொடும் நிலையில் மாநாடு இடம்பெறுகிறது.
ஹியூஸ்டன் உச்சநிலை மாநாட்டில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெனிசுவேலாவும் பங்கேற்கும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சர் டக் பர்கம் கூறினார்.
“மத்திய கிழக்கு நாடுகளின் சீர்குலைவுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உலகின் புவிசார் அரசியல் எண்ணெய் மையம் மத்திய கிழக்கிலிருந்து விலகி மேற்கத்திய நாடுகளுக்கு மாறுகிறது என்பதையே இது காட்டுகிறது,” அவர் ‘ஃபாக்ஸ் பிஸ்னஸ்’ நிறுவனத்திடம் கூறினார்.
ஹியூஸ்டன் கூட்டங்கள் புதன்கிழமைவரை நீடிக்கும். உலகளாவிய எரிசக்திச் சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு இடையே, குளிர்காலத்திற்கு முன்னர் ஐரோப்பா தனது எரிவாயுச் சேமிப்பு வசதிகளை நிரப்பப் போராடிவரும் நிலையில் மாநாடு நடைபெறுகிறது.
சீனா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளியல் நாடுகளின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்கின்றனர். அவர்களுடன் கனடா, சவூதி அரேபியா போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பேராளர்களும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
வெனிசுவேலாவின் எண்ணெய்வள அமைச்சர் பாவ்லா ஹெனாவோ, அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான பிடிவிஎஸ்ஏ எண்ணெய் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜோவன்னி மார்ட்டினெஸ் ஆகியோர் அதில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கத் தரப்பில் திரு பர்கமுடன் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட்டும் இணைந்துகொள்வார்.

