வாஷிங்டன்/துபாய்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாகும் என்று அமெரிக்கா, பாகிஸ்தான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால், அவ்வளவு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக சாத்தியமில்லை என ஈரான் கைவிரித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சனிக்கிழமை அன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானுடனான முக்கிய ஒப்பந்தம் தனது 80வது பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபும் இந்த ஒப்பந்தம் மின்னிலக்க முறையில் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறியிருந்தார்.
அதன் பிறகே, அடுத்த வாரம் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றார் அவர்.
ஆனால், டிரம்ப்பின் பதிவிற்கு முன்பாகப் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான இஸ்மாயில் பாகேய், ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும் வரும் நாள்களில் அதற்கு வாய்ப்புள்ளது என்றும் அரசாங்க ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்கிடையே, ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஒரு தகவலை வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதில், “இந்த அமைதி ஒப்பந்தத்தின் அரசியல், சட்ட மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் இன்னும் தீவிரமாக ஆராய்ந்து வருவதால் ஒப்பந்தம் குறித்து ஈரான் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை,” என்று அடையாளம் தெரியாத ஓர் ஈரானிய அதிகாரியை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இழுபறிக்கு மத்தியில் ஒப்பந்தத்தை எப்படியாவது இறுதி செய்யும் நோக்கத்தில் கத்தார் நாட்டு சமரசப் பேச்சாளர்கள் ஞாயிறு காலை அவசரமாக டெஹ்ரானுக்குப் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
முன்னதாக, ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த தகவலில் “ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஈரானால் முடக்கப்பட்ட உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணை உடனடியாக அனைவருக்கும் திறந்துவிடப்படும்,” என்று அதிபர் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டவுடன் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை உடனடியாக மீட்டுக்கொள்ளும் என்று அமெரிக்க, ஈரான் ஆகிய இருதரப்பு வட்டாரங்களும் கூறின.
இந்தப் போருக்கு முக்கிய காரணமாக டிரம்ப் குறிப்பிட்டிருந்த ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

