அமெரிக்கா-ஈரான் சண்டை: ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து

அமெரிக்கா-ஈரான் சண்டை: ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து

படம்: ராய்ட்டர்ஸ்

01 Mar 2026 - 7:10 pm

2 mins read

துபாய்: ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிக்கான ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு உலக விமானப் போக்குவரத்துத் துறையில் இந்த அளவிற்கு இடையூறுகள் இருந்ததில்லை.

விமானச் சேவைகளை மாற்றிக்கொள்வதற்கான தளங்களாக விளங்கும் துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அரபுச் சிற்றரசு நகரங்கள், கத்தார் தலைநகர் தோஹா ஆகியவற்றின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது அதிக அளவில் இடையூறுகளை எதிர்நோக்குகின்றன.

மத்திய கிழக்கு வட்டாரத்தின் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருக்கிறது.

அமெரிக்க, இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி சனிக்கிழமை (பிப்ரவரி 28) கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு வட்டாரத்தில் குழப்பநிலை தொடர்கிறது.

ஈரான்மீது ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) மேலும் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

அதற்குப் பதில் நடவடிக்கையாக மத்திய கிழக்கில் அண்டை நாடுகள்மீது ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதையடுத்து இரண்டாவது நாளாக துபாய், தோஹா ஆகியவற்றுக்கு அருகே பலமுறை பயங்கரமான வெடிப்புச் சத்தம் கேட்டது.

ஈரானியத் தாக்குதல்களால் துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. அபுதாபி, குவைத்திய விமான நிலையங்களிலும் சேதம் ஏற்பட்டது.

ஈரான், ஈராக், இஸ்ரேல், சிரியா, குவைத், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அனைத்தும் தங்களின் வான்வெளியைப் பாதியாவது மூடுவதாக சனிக்கிழமை அறிவித்திருந்தன. மத்திய கிழக்கு நாடுகளின் தலைநகரங்கள்மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது அதற்குக் காரணம்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முக்கிய விமான நிறுவனங்கள் பெரிய அளவில் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான தங்களின் சேவைகளை ரத்து செய்தன. அதனால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

எமிரேட்ஸ், எட்டிஹாட், ஏர் பிரான்ஸ், பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ், ஏர் இந்தியா, டர்க்கி‌ஷ் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா உள்ளிட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
உலகம்மத்திய கிழக்குஈரான்அமெரிக்காஇஸ்ரேல்துபாய்கத்தார்