டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுவாயுத உடன்பாட்டை எட்டுவது பற்றி கலந்துபேச ஈரான் தயாராக இருப்பதாய் ஈரானிய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்குமுன் அமெரிக்கா அதன் வர்த்தகத் தடைகளை நீக்க முன்வரவேண்டும் என்றார் அவர்.
எனினும், அணுவாயுத உடன்பாடு குறித்த கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
ஈரானுடன் உடன்பாட்டை எட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முயன்றபோதும் அவ்வாறு செய்வது சிரமமாக இருக்கிறது என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ.
ஆனால், உடன்பாட்டுக்கான முடிவு அமெரிக்காவின் கையில் இருப்பதாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜிட் டாக்ட்- ராவன்சி பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது கூறினார். “அமெரிக்கா உண்மையாக உடன்பாட்டை எட்ட விரும்பினால் அதற்கான பாதையில் இந்நேரம் சென்றுகொண்டிருப்போம்,” என்றார் திரு டாக்ட்- ராவன்சி.
அணுவாயுதத் திட்டத்தை முடக்குவதற்கான உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான்மீது தாக்குதல் நடத்தப்போவதாகத் திரு டிரம்ப் இதற்குமுன் மிரட்டினார். அமெரிக்காவும் மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அதன் படைப்பலத்தை வலுப்படுத்திவருகிறது.
அமெரிக்காவும் ஈரானும் இம்மாதத் தொடக்கத்தில் ஓமானில் மறைமுகமான பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது திரு டாக்ட்- ராவன்சி, இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை ஜினிவாவில் நடைபெறும் என்று உறுதியாகக் கூறினார். அந்தப் பேச்சுவார்த்தை ஆக்ககரமான முறையில் இருக்கும் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஓமான் ஏற்று நடத்தவிருப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடலை நல்லபடியாக நடத்த எப்போது வேண்டுமானாலும் சுவிட்சர்லாந்து தயார்நிலையில் இருக்கும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 6ஆம் தேதி ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, அமெரிக்கத் தூதர் ஸ்டீஃப் விட்காஃப்புடனும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகன் ஜேரட் குஷ்னருடனும் ஓமானில் கலந்துரையாடினர்.
முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின், அமெரிக்க அரசாங்கத்துடன் ஈரான் உடன்பாட்டை எட்டத் தவறினால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று திரு டிரம்ப் எச்சரித்திருந்தார்.

