அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்: தகவல்கள்

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்: தகவல்கள்

1 of 3
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

14 Apr 2026 - 9:13 pm

2 mins read

இஸ்லாபாத்: இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய, அமெரிக்க அதிகாரிகளை வரவழைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக மூத்த பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசதந்திர நடவடிக்கைகளுக்கு வழிவிடும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கூடுதல் காலத்துக்கு நீடிக்கச் செய்வதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மீண்டும் இருதரப்பையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

“மறுபடியும் அவர்கள் இஸ்லாமாபாத்துக்கே வருமாறு விரும்புகிறோம். ஆனால், இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை,” என்று தகவல் தெரிவித்த நபர் சொன்னார். அவர் தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

“சந்திப்பு விரைவில் நடக்கக்கூடும். ஆனால், தேதிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை,” என்றும் அவர் கூறினார்.

“கூடுதல் அவகாசத்தை ஏற்படுத்தித் தரவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தற்போதைய காலக்கெடுவையும் தாண்டி நீட்டிக்கவும் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம்,” என்றார் அந்நபர்.

தற்போது நடப்பில் இருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் அடுத்த வாரம் நிறைவடைகிறது. அதற்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கக்கூடும் என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத மற்றோர் அதிகாரியும் கூறினார்.

இதற்கிடையே, அமெரிக்கா, ஈரானைச் சேர்ந்த குழுக்கள் மறுபடியும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இவ்வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் போகக்கூடும் என்று தகவல் தெரிந்த சிலர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இருதரப்புக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகாலமாக இல்லாத ஆகப் பெரிய அளவிலான பேச்சுவார்த்தையாகும்.

இரண்டாவது பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் இவ்வார இறுதியிலேயே பேச்சுவார்த்தை இடம்பெறக்கூடும் என்றும் தகவல் தெரிந்த ஒருவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 17லிருந்து 19ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தச் சம்பந்தப்பட்ட குழுக்கள் எண்ணம் கொண்டுள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் சொன்னார்.

ஆகக் கடைசி நிலவரப்படி, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு, அந்நாட்டு ராணுவம், பிரதமர் அலுவலகம் ஆகியவை ராய்ட்டர்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. வெள்ளை மாளிகையும் கருத்துரைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்அமெரிக்காபாகிஸ்தான்மத்திய கிழக்கு