வாஷிங்டன்/டெஹ்ரான்: ஈரானுடனான போரை நிறுத்தவும் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் வகைசெய்யும் இடைக்கால ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நிலைமை ஈரானுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்பட்டதைக் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் மறுத்த சூழலிலும் ஒப்பந்தம் முன்னரே கையெழுத்தாகியிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிட ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
பிரான்சில் கையெழுத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அருகே உள்ள வர்சாய்ஸ் மாளிகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். அங்கு அவர் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனுடன் இரவு உணவு விருந்தில் கலந்துகொண்டார்.
வர்சாய்ஸ் மாளிகையில்தான் முதலாம் உலகப் போரை அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தம், 1919ஆம் ஆண்டு கையெழுத்தானது. சக்திவாய்ந்த உலக நாடுகளின் தலைவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அண்மை அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாகர் கலிபாஃப் இருவரும் இம்மாதம் 14ஆம் தேதி மின்னிலக்க முறையில் கையெழுத்திட்டனர். திரு டிரம்ப்பின் முன்னிலையில் அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிறகு புதன்கிழமை (ஜூன் 17) திரு டிரம்ப்பும் ஈரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
ஹோர்முஸ் நீரிணை
ஒப்பந்தத்தில் இடம்பெறும் அம்சங்களின்படி ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நீரிணை பல மாதங்களாகக் கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டதைத் தொடர்ந்து உலகில் எரிசக்தி விலை பேரளவில் அதிகரித்தது.
ஈரானிய எண்ணெய்மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகள் தளர்த்தப்படவேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அணுசக்தி விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை தொடரும்.
இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையெழுத்தாகும் என்று திரு டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். ஹோர்முஸ் நீரிணையில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய கண்ணிவெடிகளை அகற்ற நேரம் தேவை என்பது அவர் சொன்ன காரணம்.

