அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சு உடன்பாடின்றி முறிந்தது

அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சு உடன்பாடின்றி முறிந்தது

2 mins read
அமைதியை எட்ட இயலாமல் அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர்
4bd6ae9d-9a4a-4c8a-9d00-dec85be69f8e
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கி, துணை அதிபர் ஜே.டி வான்ஸ், சனிக்கிழமை (ஏப்ரல் 11) இஸ்லாமாபாத் சென்றடைந்தார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகரில் நடந்த அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாமல் முறிந்துவிட்டது.

மத்திய கிழக்கு நிலவரம் இரண்டு வாரச் சண்டை நிறுத்தத்தைப் பாதிக்கும் விதமாக 21 மணிநேரமாக நடந்த இருதரப்பு அமைதி முயற்சி தோல்வியடைந்து விட்டதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்தார்.

அணுவாயுதத் தயாரிப்பை நிறுத்தவேண்டும் என்ற முக்கிய நிபந்தனை உள்ளிட்ட பல அமெரிக்கக் கோரிக்கைகளை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது என்று திரு வான்ஸ் குறிப்பிட்டார்.

“உடன்பாட்டை எட்டவில்லை என்பது எங்களுக்கு நல்ல செய்தியன்று. அதேநேரம் அமெரிக்காவைவிட அது ஈரானுக்கு கெடுதலாகவே அமையும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.

“எனவே உடன்பாடில்லாமல் நாங்கள் அமெரிக்கா திரும்புகிறோம். எங்களது நிபந்தனைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்,” என்று கூறிய திரு வான்ஸ், அதன்பிறகு சக அதிகாரிகளுடன் விமானத்தில் ஏறி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

ஈரானின் டஸ்னிம் செய்தி ஊடகம், அமெரிக்காவின் கோரிக்கைகள் ஈரானால் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில் அமைந்திருந்தன என்று குறிப்பிட்டது.

கடந்த 1979ஆம் ஆண்டில் ஈரானில் நடந்த புரட்சிக்குப் பிறகு, அமெரிக்காவும் ஈரானும் உயர்நிலைச் சந்திப்பு நடத்தியது இதுவே முதன்முறை.

பேச்சுவார்த்தையில் மூன்று அம்சங்கள் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தின. ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பது, ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் நிலை, வெளிநாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈரானின் S$34.39 பில்லியன் (US$27 பில்லியன்) சொத்துகளை விடுவிப்பது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது இரு போர்க் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று கன்னி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டது என்று அமெரிக்கா கூறியது.

எந்த அமெரிக்கப் போர்க் கப்பலும் அவ்வழியே பயணம் செய்யவில்லை என ஈரானிய அதிகாரபூர்வ செய்தி ஊடகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்