இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகரில் நடந்த அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாமல் முறிந்துவிட்டது.
மத்திய கிழக்கு நிலவரம் இரண்டு வாரச் சண்டை நிறுத்தத்தைப் பாதிக்கும் விதமாக 21 மணிநேரமாக நடந்த இருதரப்பு அமைதி முயற்சி தோல்வியடைந்து விட்டதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்தார்.
அணுவாயுதத் தயாரிப்பை நிறுத்தவேண்டும் என்ற முக்கிய நிபந்தனை உள்ளிட்ட பல அமெரிக்கக் கோரிக்கைகளை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது என்று திரு வான்ஸ் குறிப்பிட்டார்.
“உடன்பாட்டை எட்டவில்லை என்பது எங்களுக்கு நல்ல செய்தியன்று. அதேநேரம் அமெரிக்காவைவிட அது ஈரானுக்கு கெடுதலாகவே அமையும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.
“எனவே உடன்பாடில்லாமல் நாங்கள் அமெரிக்கா திரும்புகிறோம். எங்களது நிபந்தனைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்,” என்று கூறிய திரு வான்ஸ், அதன்பிறகு சக அதிகாரிகளுடன் விமானத்தில் ஏறி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
ஈரானின் டஸ்னிம் செய்தி ஊடகம், அமெரிக்காவின் கோரிக்கைகள் ஈரானால் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில் அமைந்திருந்தன என்று குறிப்பிட்டது.
கடந்த 1979ஆம் ஆண்டில் ஈரானில் நடந்த புரட்சிக்குப் பிறகு, அமெரிக்காவும் ஈரானும் உயர்நிலைச் சந்திப்பு நடத்தியது இதுவே முதன்முறை.
பேச்சுவார்த்தையில் மூன்று அம்சங்கள் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தின. ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்குத் திறப்பது, ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் நிலை, வெளிநாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈரானின் S$34.39 பில்லியன் (US$27 பில்லியன்) சொத்துகளை விடுவிப்பது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தனது இரு போர்க் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று கன்னி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டது என்று அமெரிக்கா கூறியது.
எந்த அமெரிக்கப் போர்க் கப்பலும் அவ்வழியே பயணம் செய்யவில்லை என ஈரானிய அதிகாரபூர்வ செய்தி ஊடகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதற்கிடையே, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள இரண்டு வாரச் சண்டை நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கைவிடுத்துள்ளது.
வரும் நாள்களில் இருதரப்பும் மேலும் சில பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்வுகாண வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்நாட்டின் கப்பல் படைக்குப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் தமது படையைக் கொண்டு சுற்றிவளைக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்மூலம் எந்தக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையவோ வெளியேறவோ முடியாது என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
“பாகிஸ்தானில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பல மணி நேரப் பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. பல கோரிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால் அணுவாயுதம் தொடர்பான கோரிக்கையை ஈரான் மறுத்துவிட்டது,” என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

