வாஷிங்டன்: ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வகைசெய்யும் அமைதி ஒப்பந்தத்தைத் தாங்கள் நெருங்கிவிட்டதாக அமெரிக்காவும் ஈரானும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன.
வரும் நாள்களில் முதற்கட்ட ஒப்பந்தத்தில் வாஷிங்டன் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இதுவரை வரையப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்படக்கூடும் என்றும் போரில் தமது நாடுதான் கூடுதல் வலுவானது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார்.
போரில் வெற்றிபெற்றதாகக் கூறும் ஈரான்
“அமெரிக்காவுடனான போரில் வெற்றிபெற்றது ஈரான்தான்,” என்று திரு அராக்சி ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் கூறினார்.
அதற்கு சில மணிநேரத்துக்குப் பிறகு அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையை நோக்கி பாய்ச்சப்பட்ட ஈரானிய வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்த வானூர்திகள் வர்த்தகப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன என்று அந்நபர் குறிப்பிட்டார்.
அவர் தனது அடையாளத்தை வெளியிடாமல் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய தளபத்தியம் பின்னர் இச்செய்தியை உறுதிப்படுத்தியது. கப்பல்கள் அவ்வழியே செல்ல ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும் தளபத்தியம் குறிப்பிட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படவேண்டும், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முடக்குவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்புகளிலிருந்தும் தகவல் தெரிந்தவர்கள் இவ்விவரங்களை வெளியிட்டனர்.
ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகு ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் காரணம் காண்பித்துதான் அமெரிக்கா, ஈரான்மீது போர் தொடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முக்கியக் குறிக்கோள்களைப் பூர்த்திசெய்வதாகவும் பேச்சுவார்த்தை மிகவும் நன்றாகப் போவதாகவும் தமது அடையாளத்தை வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் சொன்னார்.
பல்வேறு தரப்புகள் வெளியிட்ட தகவல்களின்படி ஒப்பந்தம் பெரும்பாலும் டெஹ்ரானின் விருப்பத்துக்கேற்ப அமைந்துள்ளதாகத் தெரிகிறது. ஓமானுடன் சேர்ந்து ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தைக் கவனித்துக்கொள்ளும் என்று திரு அராக்சி கூறினார்.

