அமெரிக்கா, ஈரான் தாக்குதல்: மோதல் முற்றுகிறது

அமெரிக்கா, ஈரான் தாக்குதல்: மோதல் முற்றுகிறது

2 mins read
7806bb89-5565-4179-985c-d35d9e5aeed4
2026 ஜூலை 15 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அமெரிக்க மத்திய தளபத்தியம், ஈரான்மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் வெடிப்பிலிருந்து புகை எழும்புகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்/யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட்

துபாய்: அமெரிக்காவும் ஈரானும் ஒன்று மற்றதன் உள்கட்டமைப்பு வசதிகளைத் தாக்கி வருவதால் மத்திய கிழக்குப் போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரானில் உள்ள பாலங்களைத் தாக்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) குவைத்தில் உள்ள ஒரு மின்சாரம், கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள்மீது தாக்குதலை நடத்தியது.

இரு தரப்பும், உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்துத் தாக்கி வருகின்றன.

இந்தப் புதிய மோதலால் வளைகுடாப் பகுதியிலிருந்து எரிசக்தி விநியோகம் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கக் கடற்படையினர் ஓர் எண்ணெய்க் கப்பலுக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

அதே நேரத்தில், செங்கடலின் நுழைவாயிலில் உள்ள மத்திய கிழக்கின் மற்றொரு முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஏமன் கடற்கரைக்கு அப்பால் ஆயுதம் ஏந்திய நபர்கள் மற்றொரு கப்பலைக் கைப்பற்றினர். இதனால் அப்பகுதியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற தாய்லாந்து நாட்டுக் கொடியுடன்கூடிய கப்பலை ஈரானின் புரட்சிப் படையினர் இலக்கு வைத்ததாக வெள்ளிக்கிழமை ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இது குறித்து கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.

கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததில் இருந்து, வாஷிங்டனும் டெஹ்ரானும் உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இந்த மோதல்கள் குறித்த செய்திகள் வெளியானதால் கச்சா எண்ணெய் விலை மூன்று விழுக்காடு அதிகரித்ததுடன் மூன்றாவது வாரமாக தொடர்ந்து அதன் விலை கூடி வருகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

உலகளாவிய பங்கு விலைகள் சரிந்தன. வால் ஸ்ட்ரீட் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கி பின்னர் சீரடைந்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பரவலான வான்வழித் தாக்குதல்களை நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் ஈரானின் கடற்கரை அல்லது தீவுகள் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பையும் அவர் நிராகரிக்கவில்லை.

ஆனால் அமெரிக்காவின் இத்தகைய தாக்குதல்களால் ஈரான் அதன் அண்டை நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்கி பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் அல்லது ஈரானியப் பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

“அமெரிக்காவின் தாக்குதல்கள் மேலும் சில நாள்களுக்குத் தொடர்ந்தால், நாங்கள் முழு அளவில் தாக்குதல் நடத்தும் கட்டத்திற்கு மாறுவோம்,” என்று புரட்சிக் காவல் படையின் முன்னாள் தலைமை தளபதியான மோசன் ரெசாய் அரசாங்கத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காதாக்குதல்