டோஹா: மத்திய கிழக்கு வட்டாரத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கத்தாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தை, எந்தவிதமான முக்கிய உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, அந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் பாதுகாப்பாக அனுமதிப்பது, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டாலர் நிதி ஆதாரங்களை விடுவிப்பது ஆகிய இரு முக்கியப் பிரச்சினைகள் குறித்தே இந்த இரண்டு நாள் கூட்டத்தில் அதிகாரிகள் விரிவாக விவாதித்தனர்.
அமெரிக்கா - ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் நேரடியாகப் பேசாமல், கத்தார் மற்றும் பாகிஸ்தானியப் பேராளர்கள் மூலமாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கத்திற்கு பிறகு அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல், அணுவாயுதக் குறைப்பு தொடர்பில் இருதரப்பும் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரரிவித்துள்ளார்.
ஆனால், ஈரானுடனான பேச்சுவார்த்தையின்போது அணுசக்தி விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்றும் அதுகுறித்து வரும் நாள்களில்தான் பேசப்படும் என்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் பின்னர் தெளிவுபடுத்தினார்.
உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணை மீதான தங்களின் இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் அனைத்துலக அளவில் நிலைநாட்ட ஈரான் உறுதியாக உள்ளது. ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
அந்நீரிணையில் உள்ள கடற்படைக் கண்ணிவெடிகளை அகற்ற உதவ ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அதற்கு ஈரான் உடன்பட மறுப்பதால் தற்போதைக்கு அவ்வட்டாரத்தில் பதற்றமான சூழலே நீடிக்கிறது.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப்பின் சாதகமான கருத்துகளால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது.

