சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை

2 mins read
1138c1f3-086c-4c53-9af1-5956f617d421
மத்திய கிழக்கு மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜூன் 19ஆம் தேதி தொடங்கவிருந்த, லூசெர்ன் ஏரிக்கு மேலே அமைந்துள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு ஹோட்டல் வளாகத்துக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: லெபனானில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஈரான் இடையிலான இடைக்காலப் போர் உடன்பாட்டை நிரந்தர வட்டார ஒப்பந்தமாக மாற்றுவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இதற்காக, அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் சுவிட்சர்லாந்துக்கு விரைந்துள்ளனர். ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களுக்கு 60 நாள்களுக்குள் தீர்வுகாணும் நோக்கில், இரு நாடுகளும் அண்மையில் 14 அம்சப் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

லெபனானில் நிலவிய கடும் மோதல்களால் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தமது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்ததால், இந்தத் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது அமெரிக்கா, கத்தாரின் கூட்டு முயற்சியால் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னருடன் தூதர் விட்கோஃப் சுவிட்சர்லாந்தில் இணையவுள்ளார்.

ஈரானிய அமைச்சர் அராக்சியும் அங்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, லெபனான் அதிபர் ஜோசஃப் அவுனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் ஏந்திய போராட்டத்தைக் கைவிட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா வலியுறுத்தியது.

மேலும், இஸ்ரேல் - லெபனான் இடையிலான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வாஷிங்டனில் நடத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியன்று தொடங்கிய ஈரான் போரில் குறைந்தது 7,000 பேர் மாண்டுவிட்டனர். அமெரிக்கா, இஸ்‌ரேல் ஆகியவை ஈரான்மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலர் மடிந்தனர். மாண்டோரில் பெரும்பாலானோர் ஈரான், லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். போரின் காரணமாக எரிசக்தி விலை அதிகரித்தது. அத்துடன் உலகெங்கும் பணவீக்கம் மோசமடைந்தது.

ஜூன் 19ஆம் தேதியன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்தது. ஆனால் லெபனான் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து வாராந்தர அடிப்படையில் கிட்டத்தட்ட 8 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்