அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் இரு நாள்கள் விடுமுறை

இஸ்லாமாபாத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானில் இரு நாள்கள் விடுமுறை

1 mins read
487ae129-117c-4549-9c60-569007287adf
இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

அதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 9, 10 என இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை இவ்வார இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையில் அமெரிக்க அரசதந்திரிகள் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

விடுமுறை தொடர்பான அறிக்கை புதன்கிழமை (ஏப்ரல் 8) இரவு வெளியானது. எதற்காக விடுமுறை வழங்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை.

இருப்பினும், பாகிஸ்தானிய உயரதிகாரிகள், “எதிர்வரும் முக்கியமான அரசதந்திரப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்கள் கருதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியச் சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் காவல் நிலையம், மருத்துவமனைகள், எரிசக்தி நிலையங்கள் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்