துபாய்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பர் 5) அமெரிக்க, ஈரானியப் படைகள் மாறி மாறி தாக்குதல் நடத்தின.
ஈரானின் மூன்று எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்தது. அதுபோல, ஹோர்முஸ் நீரிணையில் அனுமதி இல்லாத வழித்தடத்தில் சென்ற மூன்று எண்ணெய்க் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கியதாக ஈரான் கூறியது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவல்படை (ஐஆர்ஜிசி), இரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள்மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
அதற்குப் பதிலடியாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே நின்ற கப்பல் உட்பட மூன்று ஈரானியக் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் உறுதிப்படுத்தியுள்ளது.
“எங்கள் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரானுக்குக் கடுமையான பொருளியல் இழப்பு ஏற்படுத்தப்படும்,” என்று அமெரிக்க மத்தியத் தளபத்தியத்தின் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் எச்சரித்துள்ளார்.
அப்படி ஒருவேளை ஈரானைத் தாக்கினால் பதிலடித் தாக்குதல்கள் தீவிரமாக்கப்படும் என்று ஐஆர்ஜிசியும் மிரட்டல் விடுத்துள்ளது. “அனுமதிக்கப்படாத நீர்வழிகள் வழியே செல்ல வேண்டாம்; மீறினால் குறிவைக்கப்படுவீர்கள்,” என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, கார்க் பகுதியில் நான்கு அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதில் எவருக்கும் காயமில்லை என்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அதேபோல, தனது தரப்பிலும் எவருக்கும் பாதிப்பில்லை என அமெரிக்கத் தளபத்தியம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கத் தொடங்கியதை அடுத்து, உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கார்க் தீவுமீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் எண்ணெய் விநியோகம் மேலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அனைத்துலகச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.28 அமெரிக்க டாலராக (S$122.16) உயர்ந்துவிட்டது.
முன்னதாக, கார்க் தீவைக் கைப்பற்ற விரும்புவதாகவும் அதற்கு அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாகவும் கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆயினும், ஜூன் 17ஆம் தேதி இடைக்காலப் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதால் கார்க் தீவுமீது அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடவில்லை.


